Zika Virus | இந்தியாவில் ஜிகா வைரஸ் எச்சரிக்கை..!! எந்தெந்த உறுப்புக்களை முதலில் பாதிக்கும் தெரியுமா?
1947 ஆம் ஆண்டில் உகாண்டாவில் முதன்முதலாக கொசுக்களால் பரவியவை தான் ஜிகா வைரஸ். இந்த வைரஸ் ஏடிஸ் கொசுக்கள், குறிப்பாக ஏடிஸ் எஜிப்டி மற்றும் ஏடிஸ் அல்போபிக்டஸ் ஆகியவற்றின் மூலம் பரவும் வைரஸ் ஆகும். இந்த கொசுக்கள் மக்களை கடித்து வைரஸ்களை பரப்பும். இந்த வைரஸ் கொசுக்களால் மட்டுமின்றி, பாலியல் தொடர்பு, இரத்த மாற்றம் மற்றும் கர்ப்பத்தின் மூலம் குழந்தைக்கும் பரவும். தற்போது இந்த வைரஸ் வேக மெடுக்க தொடங்கியுள்ளது. இந்த வைரஸ் உடலினுள் நுழைந்ததும் எவ்வாறு செயல்படுகிறது மற்றும் உடலுறுப்புக்களை எவ்வாறு பாதிக்கிறது என்பதைக் காண்போம்.
ஜிகா வைரஸ் உடல் உறுப்புக்களை எப்படி தாக்குகிறது?
ஜிகா வைரஸ் உடலினுள் நுழைந்ததும் உடலின் பல்வேறு உறுப்புக்களை ஆக்கிரோஷமாக தாக்கி, கடுமையான மற்றும் உயிருக்கு ஆபத்தான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
மூளை
ஜிகா வைரஸ் கர்ப்பிணிப் பெண்களைத் தாக்கினால், அது நஞ்சுக்கொடியைத் தாக்கி, பிறக்காத வயிற்றில் வளரும் குழந்தைக்கு மைக்ரோசெபாலி உருவாகும் அபாயத்தை அதிகரிக்கும். அதாவது, இந்த வைரஸால் பாதிக்கப்படும் குழந்தையின் தலை சிறியதாக இருக்கும் மற்றும் இது மூளை பாதிப்புக்கு வழிவகுக்கும்.
கல்லீரல்
ஜிகா வைரஸ் கல்லீரலுக்கு தீங்கு விளைவிக்கும். அதுவும் சில சமயங்களில் இது கல்லீரல் அழற்சியை ஏற்படுத்தி ஹெபடைடிஸை உண்டாக்கும். இதற்கான சரியான காரணம் இன்னும் தெரியாவிட்டாலும், ஜிகா வைரஸ் நோயாளிகளிடம் கல்லீரல் பிரச்சனைகள் இருப்பது தெரிய வந்துள்ளது.
கண்கள்
கண்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். அதுவும் இது யுவைடிஸை ஏற்படுத்தும். அதாவது இது கண்ணின் உள்ளே வீக்கம், வலி, சிவத்தல் மற்றும் பார்வை சிக்கல்களுக்கு வழிவகுக்கும். இந்நிலையானது அன்றாட வாழ்க்கையை கடுமையாக பாதிக்கும்.
இதயம்
அடுத்தபடியாக ஜிகா வைரஸ் இதயத்தை தாக்கி மயோர்கார்டிடிஸை ஏற்படுத்தும். இந்நிலையில் இதயம் பலவீனமாவதோடு, மார்பு வலி, சோர்வு மற்றும் மூச்சுத்திணறலை ஏற்படுத்தும். இன்னும் தீவிரமான நிலைகளில் மாரடைப்பு, இதய செயலிழப்பு ஏற்பட வழிவகுக்கும்.
சிறுநீரகம்
சில ஆய்வுகள் இந்த வைரஸ் சிறுநீரக செயல்பாட்டை பாதிப்பதாக கூறுகின்றன. இதன் விளைவாக சிறுநீரகங்கள் இரத்தத்தில் இருந்து கழிவுகளை வடிகட்டுவதை கடினமாக்குகிறது.
ஜிகா வைரஸ் ஒருவரை தாக்கினால், இந்த அறிகுறிகளை வெளிப்படும் ;
- உடல் வலியுடன் காய்ச்சல்
- சருமத்தில் வெடிப்புகள்
- மூட்டு வலி
- சிவந்த கண்கள்