ஸ்லீப் டைமர் முதல் பிளே லிஸ்ட் வரை.. புதிய அம்சங்களை அறிமுகம் செய்த YouTube..!!
பிரீமியம் பயனர்கள் மட்டுமல்லாமல் அனைத்துவகையான பயனர்களும் பயன்பெறும் வகையில் 4 புதிய அம்சங்களை யூடியூப் அறிமுகம் செய்துள்ளது. இதில், ஸ்லீப் டைமர், மேம்படுத்தப்பட்ட மினி பிளேயர், செயற்கை நுண்ணறிவு உதவியுடன் பிளேலிஸ்ட்டை உருவாக்கும் வசதி என பல்வேறு சிறப்பான அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. முன்பு பிரீமியம் பயனர்களுக்கு மட்டுமே இருந்த இந்த அம்சம், தற்போது அனைத்துவகையான பயர்களுக்கும் பயன்படுத்தும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் யூடியூப் நிறுவனம், பயனர்களின் வசதிக்கேற்ப யூடியூப் அவ்வபோது பல்வேறு புதிய அம்சங்களையும், விதிமுறைகளையும் வகுத்து வருகிறது. அந்தவகையில் தற்போது அனைத்து பயனர்களும் பயன்பெறும் வகையில் 4 புதிய அம்சங்களை அறிமுகம் செய்துள்ளது.
வீடியோ வேகம் ; யூடியூபில் ஒளிபரப்பாகும் விடியோக்களின் வேகத்தை அதிகரிக்கவோ குறைக்கவோ செய்யலாம். இதற்கு முன்பு 0.25 புள்ளிகள் மட்டுமே குறைக்க முடியும். ஆனால் தற்போது மிகவும் துல்லியமாக 0.05 புள்ளிகள் வரை விடியோக்களின் வேகத்தைக் குறைக்கலாம். இதேபோன்று 2x வேகத்தில் வேகத்தையும் கூட்டலாம். ஆனால், தனிப் பயனர்களுக்கு (customize) மட்டுமே இந்த அம்சம் உள்ளது.
ஸ்லீப்பர் டைம் : பலரும் வீடியோக்களைக் காணும்போது தூங்கிவிடுவதுண்டு. இதற்குத் தீர்வாக, யூடியூப் அறிமுகப்படுத்தியுள்ள ஸ்லீப் டைமர் அம்சம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதன் மூலம், வீடியோவை இயக்கிய பிறகு, எத்தனை நிமிடங்களில் தானாக நின்றுவிட வேண்டும் என்பதை நாம் முன்பே நிர்ணயிக்கலாம். இது, மொபைல், டேப்லெட் மற்றும் டிவி என அனைத்து தளங்களிலும் கிடைக்கிறது.
இதன்மூலம் 10, 15, 20, 30, 45 நிமிடங்கள் அல்லது ஒரு மணிநேரம் என்ற குறிப்பிட்ட இடைவேளைக்குப் பிறகு செயலியில் இருந்து வெளியேறி திரை தானாக அணைந்துவிடும். பயனர்கள் இந்த நேரத்தை தங்கள் தேவைக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளலாம்.
இரண்டு வேலைகளை ஒரே நேரத்தில் : வீடியோ பார்க்கும்போது, வேறு சில தகவல்களைத் தேடுவது இயல்பு. இதற்கு வசதியாக, யூடியூப் மேம்படுத்தப்பட்ட மினி பிளேயரை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், வீடியோ சிறிய திரையில் தோன்றும். இதனால், வீடியோவை இயக்கியவாறே நாம் வேறு தளங்களில் உலாவலாம்.
செயற்கை நுண்ணறிவு: யூடியூப் தற்போது செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி பிளேலிஸ்ட்டை உருவாக்கிக் கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், நாம் விரும்பும் தீம் அல்லது பாணியைத் தேர்ந்தெடுத்து, AI உருவாக்கிய புகைப்படங்களைப் பயன்படுத்தி பிளேலிஸ்ட்டை அழகாக வடிவமைக்கலாம்.
இந்த புதிய அம்சங்கள் யூடியூப் பயன்பாட்டு அனுபவத்தை முற்றிலும் மாற்றும் என்பதில் சந்தேகமே இல்லை. இதன் மூலம், பயனர்கள் இன்னும் எளிமையாகவும், வேகமாகவும், சுவாரசியமாகவும் யூடியூபை பயன்படுத்த முடியும்.
Read more ; வாங்க டீ சாப்பிடலாம்.. இந்த வார்த்தைக்கு பின்னாடி இவ்வளவு பெரிய கதை இருக்கா..!! சுவாரஸ்ய வரலாறு இதோ..