ஒரே டிக்கெட்டில் பேருந்து, மெட்ரோ, மின்சார ரயிலில் பயணிக்கலாம்..!! நடைமுறைக்கு வருவது எப்போது..? வெளியான புதிய தகவல்..!!
ஒரே டிக்கெட்டில் 3 வகை போக்குவரத்த்தில் பயணிக்கும் புதிய திட்டம் எப்போது நடைமுறைக்கு வரும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஒரே டிக்கெட்டில் 3 வகை போக்குவரத்தில் பயணிக்கும் வகையில் சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்துக் குழுமம் இந்த புதிய திட்டத்தை செயல்படுத்தவுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாள்தோறும் பணிக்கு செல்லும் லட்சக்கணக்கானோர் மாநகரப் பேருந்துகள், மின்சார ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில்களை பயன்படுத்தி வருகின்றனர்.
சிலரின் வீடுகளில் இருந்து அலுவலகத்திற்கு செல்வதற்குப் பேருந்து மற்றும் ரயில், மெட்ரோ ஆகிய 3 போக்குவரத்தையும் பயன்படுத்தினால்தான் விரைவாக அலுவலகம் சென்றடையும் சூழலும் உள்ளது. 3 வகை போக்குவரத்தையும் பயன்படுத்தும் ஒருவர், வெவ்வேறு நிர்வாகத்தின் கீழ் போக்குவரத்து சேவைக்கு தனித்தனியே பயணச்சீட்டு வாங்கும் சூழல் உள்ளது. இதனால், மாநகரப் போக்குவரத்தின் கீழ் இயங்கும் பேருந்து, சென்னை மெட்ரோ நிர்வாகத்தின் கீழ் இயங்கும் மெட்ரோ ரயில்கள் மற்றும் தெற்கு ரயில்வேயின் கீழ் இயங்கும் புறநகர் ரயில்களை இணைத்து ஒரே பயணச்சீட்டில் பயணம் செய்வதற்கான பயணிகளின் தரப்பில் கோரிக்கை எழுந்தது.
இந்நிலையில் பேருந்து, ரயில், மெட்ரோ ரயிலில் ஒரே டிக்கெட்டில் பயணிக்கும் செயலியை உருவாக்க மூவிங் டெக் இன்னொவேஷன்ஸ் நிறுவனத்திற்கு பணி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக டிசம்பரில் மாநகரப் பேருந்துகள், மெட்ரோ ரயில்களில் பயணிக்கும் வகையில் ஒரே டிக்கெட் முறை அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தாண்டு, மார்ச்சில் புறநகர் ரயில்களிலும் பயணம் செய்யும் வகையில் இத்திட்டம் விரிவுப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. ஒரே நபர், 3 போக்குவரத்துச் சேவையையும் பயன்படுத்த வேண்டும் என்றால், தனித்தனியே பயணச் சீட்டு வாங்கும் சிரமம் இதன் மூலம் தவிர்க்கப்படும்.
Read More : குலதெய்வம் கனவில் வந்தால் என்ன அர்த்தம்..? என்னென்ன பலன்கள் கிடைக்கும்..? என்ன செய்ய வேண்டும்..?