”கோயில் பணத்தை சூறையாடுவதற்கு பதில் அறநிலையத்துறையை கலைத்து விடுங்கள்”..!! பொன்.மாணிக்கவேல் பரபரப்பு பேட்டி..!!
கோயில் பணத்தை சூறையாடி வரும் இந்து சமய அறநிலையத் துறையை கலைக்க வேண்டுமென சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு முன்னாள் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் ஆவேசமாக பேசியுள்ளார்.
சேலம் சுகவனேஸ்வரர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ”அறநிலையத்துறை அமைச்சர் தொடங்கி அதிகாரிகள் வரை, மக்கள் வரிப் பணத்தில் இருந்து ஆண்டுக்கு ரூ.428 கோடி ஊதியம் வழங்கப்படுகிறது. கோயில் கணக்குகளை தணிக்கை பார்க்க ரூ.228 கோடி செலவிடப்படுகிறது.
தனி மனிதர் தவறு செய்தால் தண்டிக்கும் நிலையில், அரசே குற்றமிழைக்கும்போது என்ன செய்வது?. காவல்துறை மற்றும் முன்னாள் ராணுவத்தினரை இணைத்து கோயில் பாதுகாப்பு படை உருவாக்கப்பட்டது. ஆனால், 1022 உண்டியல் திருட்டுகள், 248 கோயில்களில் சிலைகள் திருட்டு நடந்துள்ளன. 500-க்கும் மேற்பட்ட விக்ரகங்கள் திருடுபோயுள்ளன. இதுவரை எந்த குற்றமும் கண்டுபிடிக்கவில்லை.
அறநிலையத்துறை கோயில் பணத்தை சூறையாடி வருகிறது. ஆகையால், இந்து சமய அறநிலையத் துறையை கலைத்துவிட வேண்டும். அறநிலையத்துறை அறமற்ற துறையாக மாறியுள்ளது. கோயில் பாதுகாப்புப் படையில் தற்போது முன்னாள் போலீஸாரை சேர்க்கிறார்கள். அவர்கள் மது அருந்திவிட்டு பணியில் இருக்கின்றனர்” என்று குற்றம்சாட்டினார்.