மிளகாயை விரும்பி ஏற்கும் பிரத்யங்கிரா தேவியின் சிறப்புகள் பற்றி தெரியுமா?
சக்தியின் உக்கிரமான வடிவமாக இருந்து வரும் பெண் தெய்வமாக பிரத்யங்கிரா தேவி உள்ளார். பிரத்தியங்கரா தேவி சரபேஸ்வரரின் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றியவர் என கருதப்படுகிறார். கோயில்களில் இந்த பிரத்தியங்கிரா தேவியின் உருவத்தை பார்த்தால் உக்கிரமாக இருந்தாலும், அவரின் வாய்ப் பகுதியில் மட்டும் லேசான புன்னகை இழையோடுவதை காணலாம். 4 சிங்கங்கள் கொண்ட பூட்டிய தேரை வாகனமாக கொண்ட இந்த அன்னையை வழிபாடு செய்தால் எந்த விதத்தில் பயம் ஏற்பட்டாலும், அந்த பய உணர்வு அகன்றுவிடும் என்பது நம்பிக்கை.
பலன்கள் ; இங்கு ஹோமம் செய்வதன் மூலம் நவக்கிரஹ தோஷங்கள் மற்றும் அவற்றின் தீய விளைவுகள், பில்லிசூனியம் மற்றும் திருஷ்டி ஆகியவற்றால் ஏற்படும் பிரச்னைகள், நிலப் பிரச்னைகள், தாமத திருமணம் மற்றும் திருமண பிரச்னைகள், உடல்நலக்குறைவு ஆகியவை நீங்கும் என்று நம்பப்படுகிறது. பக்தர்களின் பிரார்த்தனைக்கு ஏற்றவாறு லட்சுமி கணபதி, காலபைரவர், பகளமுகி, மஹா பிரத்யங்கிரா, வாராஹி தேவி என பல்வேறு தெய்வ ஹோமங்கள் தினமும் நடைபெறுகின்றன, உலர்ந்த சிவப்பு மிளகாய்கள் ஹோம குண்டத்தில் போடப்படுகின்றன. ஆனால் அதிசயம் மிளகாய் கமறல் சிறிது கூட இல்லாமல் அங்கு ஒரு நல்ல தெய்வீக மணம் மட்டுமே கமழ்கிறது. தினமும் காலை மாலை ஹோமங்கள் நடத்தப்படுகின்றன.
பக்தர்கள் எலுமிச்சை மாலைகளையும், காய்ந்த மிளகாயால் ஆன மாலைகளையும் படைத்து பிரத்யங்கிரா தேவியின் அருளைப் பெறுகின்றனர்.. இங்கே அன்னை பிரத்யங்கிரா கைகளில் வெவ்வேறு ஆயுதங்களேந்தி சிங்கத்தை வாகனமாகக் கொண்டு அமர்ந்த நிலையில் இருப்பதைக் காணலாம். அவளது வெறும் பார்வை மட்டுமே தங்கள் மனதில் அமைதியைத் தரும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள்.
தமிழ்நாட்டில் கும்பகோணம் தவிர தூத்துக்குடி, திருவள்ளூர், சென்னை சோழிங்கநல்லூர், சென்னை அயனாவரம், செங்கல்பட்டு, திருவெண்காடு, சீர்காழி, ஓசூர், திருச்செந்தூர், மார்த்தாண்டம், தேனி சீலையம்பட்டி ஆகிய இடங்களில் பிரத்யங்கரிரா தேவிக்கு என தனியாக கோயில்கள் உள்ளன.