சிவபெருமானே நேரில் தோன்றி அளித்த வரம்.. 15 தலைமுறையாக மலை உச்சியில் தீபம் ஏற்றுவது யார் தெரியுமா? சுவாரஸ்ய தகவல்..
பஞ்சபூதத் தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் ஆலயமாகவும் விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், ஆண்டுதோறும் நடைபெறும் திருக்கார்த்திகை தீபத் திருநாள் மிகவும் விசேஷம். இந்த நாளில் இங்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்கள், கிரிவலம் வந்து இறைவனை வழிபாடு செய்வார்கள். அங்கு ஆண்டுதோறும் கார்த்திகை தீபத் திருநாளின் மாலை வேளையில், 2668 அடி உயர மலையில் மகா தீபம் ஏற்றப்படும். ஜோதி வடிவில் உயர்ந்து நின்ற சிவபெருமான் தான், இங்கு மலை வடிவில் இருப்பதாக கூறப்படுகிறது.
திருவண்ணாமலையில் தீபத்திருவிழாவின் போது பருவத ராஜகுலத்தினர் என்ற சமூகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே மகாதீபம் ஏற்றும் உரிமையை பெருகின்றனர். அவர்கள் மட்டுமே இந்த பணியை சுமார் 15 தலைமுறைகளுக்கும் மேலாக தொடர்ந்து செய்து வருகின்றனர். ஜோதியை ஏற்றும் உரிமை பருவத ராஜகுலத்தினருக்கு எப்படி கிடைத்தது என்பதற்கு பின்னால் மிக சுவாரஸ்யமான வரலாறு ஒன்று உள்ளது.
ஜோதியை ஏற்றும் உரிமை பருவத ராஜகுலத்தினருக்கு எப்படி கிடைத்தது?
புராண கதைகளின்படி, பிரம்ம ரிஷிகளின் தியானத்தைக் கலைக்கும் வேலையில் அசுரர்கள் ஈடுபட்டனர். பிரம்ம ரிஷிகள் கோபப்படும்போது, மீன் உருவாக மாறி, கடலுக்குள் சென்று அசுரர்கள் மறைந்து கொள்வார்கள். இப்படி தோன்றியும் மறைந்தும் தம்மை வேதனைப்படுத்தும் அசுரர்களை அழித்து, தம் தவம் சிறக்க வேண்டி, சிவபெருமானிடம் ரிஷிகள் முறையிட்டனர். அடியார்களின் இன்னலை உணர்ந்த சிவபெருமான், பருவதராஜாவை அழைத்தார். கடலுக்குள் மீன் வடிவில் மறைந்துள்ள அசுரர்களை அழிக்குமாறு கட்டளையிட்டார்.
கடலுக்குள் விரைந்து சென்ற பருவத ராஜா, மீன் வடிவிலான அசுரர்களைப் பிடித்து கரையில் போட்டார். அசராத அசுரர்கள், மீண்டும் கடலுக்குள் குதித்து மறைந்தனர். சோர்வடைந்த பருவதராஜா மகள், பார்வதியிடம் உதவி கேட்டார். மனம் இரங்கிய பார்வதிதேவி, பருவதராஜனின் வலையில் சிக்கிய மீன்களை எல்லாம் தன்னுடைய வாயில் போட்டு அழித்தார்.
அப்போது எதிர்பாராத நிகழ்வாக, அசுரர்களுக்கு விரித்த வலையில், கடலுக்கு அடியில் தவம் புரிந்த மீன மகரிஷி சிக்கிக் கொண்டார். தவம் கலைந்த கோபத்தில் துடிதுடித்த மீன மகரிஷி, ‘உன் ராஜ வாழ்க்கை அழிந்து, மீன் பிடித்துதான் இனி நீ வாழ வேண்டும்.’ என்று பருவதராஜாவுக்கு சாபமிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த பருவதராஜா, ஓடோடிச்சென்று சிவனிடம் முறையிட்டார்.
கருணை கொண்ட சிவன், கார்த்திகைத் திருநாளில் திருவண்ணாமலையில் ஜோதிப் பிழம்பாகக் காட்சி தருவேன், அந்த ஜோதியை ஏற்றும் பணியை பருவதராஜ வம்சத்தினர்தான் நிறைவேற்ற வேண்டும். ஜோதியை தரிசிக்கும் கோடிக்கணக்கான பக்தர்கள், ‘அண்ணாமலைக்கு அரோகரா’ என்று முழக்கமிடும்போது அந்த பக்திப் பரவசத்தின் புண்ணியமெல்லாம் பருவதகுலத்தையே வந்து சேரும் கவலைப்பட வேண்டாம் என வரம் அருளினார். இதனால் காலம் காலமாக பருவத ராஜகுலத்தினர் திருவண்ணாமலை உச்சியில் தீபமேற்றும் திருப்பணியை நிறைவேற்றி வருகின்றனர்.