"வருவார் மோடி.. உலகமே தெரிஞ்சிருக்கு அடுத்த பிரதமர் யாருன்னு".. டெல்லி மாநாட்டில் பிரதமர் மோடி உற்சாகப் பேச்சு.!
பாரதிய ஜனதா கட்சியின் மாநாடு தலைநகர் டெல்லியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் மோடி, ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் பல வெளிநாடுகளில் இருந்து அழைப்பு வந்திருப்பதாக தெரிவித்திருக்கிறார். பாரதிய ஜனதா கட்சி மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் என்பதை உலக நாடுகளே தெரிந்து வைத்திருக்கின்றன என பெருமிதத்துடன் கூறினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் தொடர்ந்து பேசிய அவர், முதல்முறையாக பிரதமராக பதவி ஏற்ற போது பதான் கோட் மற்றும் சர்ஜிகல் ஸ்டிரைக் குறித்து நமது பாதுகாப்பு வீரர்களின் மன உறுதியை உடைக்கும் வகையில் காங்கிரஸ் கேள்வி எழுப்பியதை சுட்டிக்காட்டினார்.
2024 ஆம் வருட பாராளுமன்றத் தேர்தல்களில் இன்னும் நடைபெறவில்லை. யார் வெற்றி பெற்றார்கள் என்று அறிவிக்கவில்லை. ஆனாலும் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் வெளிநாடு செல்வதற்கு எனக்கு அழைப்பு வந்திருக்கிறது. இதிலிருந்து உலகத்திற்கே பாஜக தலைமையிலான அரசு ஆட்சிக்கு வரும் என்பது தெரிந்திருக்கிறது. அவர்களுக்கும் மோடி மீண்டும் வருவார் என்பது தெரிந்திருக்கிறது என கூறினார். இந்தக் கூட்டத்தில் தொண்டர்கள் இடம் பேசிய பிரதமர் மோடி, தேசிய ஜனநாயக கூட்டணியை 400கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என தெரிவித்தார்.
தேசிய ஜனநாயக கூட்டணி 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற வேண்டும் என்றால் பாரதிய ஜனதா கட்சி 370 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். அதற்காக நமது கட்சியின் தொண்டர்கள் கடுமையாக பாடுபட வேண்டும் என தெரிவித்தார். மேலும் பாதுகாப்புத்துறை தொடர்பாக குற்றச்சாட்டுகளை தொடர்ந்து முன்வைத்து, காங்கிரஸ் பெரும் பாவங்களை செய்திருக்கிறது என தெரிவித்தார். இந்திய ராணுவத்தின் இறையாண்மையை காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியதாக மோடி குற்றம் சாட்டினார். அவர்கள் நம்முடைய சர்ஜிகல் ஸ்ட்ரைக் பற்றி கேள்வி எழுப்பினார்கள். நமது விமானப்படை ரஃபேல் ஜெட் வாங்குவதற்கு எதிராக காங்கிரஸ் செயல்பட்டது. காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய குழப்பத்தில் இருக்கிறது. அதில் ஒரு பிரிவினர் மோடியை வெறுக்கிறார்கள். மற்றொரு பிரிவினர் மோடியை வெறுக்க மறுக்கிறார்கள். இதில் அவர்களது தோல்வி இருக்கிறது என தெரிவித்திருக்கிறார்..
மேலும் 2014 ஆம் வருடம் ஆட்சிக்கு பிரதமராக வந்த போது மத்திய கிழக்கு நாடுகளுடன் இருந்த உறவை விட தற்போது ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் கத்தார் போன்ற நாடுகளுடன் மேம்பட்ட உறவு இருப்பதாக தெரிவித்துள்ளார். நான் பதவிக்கு வந்த போது என்னுடைய மாநிலத்தை தவிர வேறு என்ன தெரியும் என்று கேள்வி எழுப்பினார்கள். இன்று கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளுடன் நல்ல நட்புறவை பேணி வருவதோடு பொருளாதாரம் தொடர்பான பல ஒப்பந்தங்களும் கையெழுத்திடப்பட்டிருக்கிறது. இந்தியாவின் வெளியுறவு கொள்கை மிகச் சிறப்பாக இருக்கிறது. உலகத்தில் உள்ள பல நாடுகளுடன் நாம் நட்பு பாராட்டி வருகிறோம் என தெரிவித்தார்.
2014 ஆம் வருடம் ஆட்சிக்கு வந்தபோது உலக பொருளாதாரத்தில் 11 வது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 5-வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. 10 வருடங்களில் இந்தியாவின் பொருளாதாரத்தை ஐந்தாவது இடத்திற்கு முன்னேற்றி இருக்கிறோம். இவை பத்து ஆண்டுகள் சாதனைதான். இன்னும் பல சாதனை நம் மக்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறது என பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மாநாட்டில் பிரதமர் மோடி தெரிவித்தார்