கனமழை எதிரொலி...! இன்று முதல் அக்.17 வரை வீட்டில் இருந்தே பணி...! தமிழக அரசு அதிரடி
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள ஐடி தங்களது ஊழியர்களை இன்று முதல் அக்.17 வரை வீட்டில் இருந்தே பணி செய்ய அறிவுறுத்த வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தி உள்ளது.
தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில், குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து, வலுவான காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக அது வலுப்பெற்று மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து புதுவை, வடதமிழகம், தெற்கு ஆந்திர கடற்கரை அருகில் நிலை கொள்ளும் என்றும் இதன் காரணமாக, அடுத்து வரும் 5 தினங்களுக்கு தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழை தொடரும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, மழை காரணமாக கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள தொழில்நுட்ப நிறுவனங்கள்(IT) தங்களது ஊழியர்களை இன்று முதல் அக்.17 வரை வீட்டில் இருந்தே பணி செய்ய அறிவுறுத்த வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. வடகிழக்கு பருவமழையால் சென்னை வாசிகள் சிரமமின்றி பயணம் செய்யும் வகையில் அக்டோபர் 15, 16 மற்றும் 17 ஆகிய நாட்களில் கூடுதல் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ அறிவித்துள்ளது.