“அம்மா, எங்கள அடிக்காத மா வலிக்குது” அழுது கெஞ்சிய குழந்தைகள்; திருநம்பி உடன் வாழ ஆசைப்பட்டு தாய் செய்த கொடூரம்..
கோவை, குழந்தைகள் நல அலுவலகத்திற்கு நேற்று அழைப்பு ஒன்று வந்துள்ளது. அழைப்பை ஏற்று பேசிய குழந்தைகள் நல அலுவலர் பரமேஸ்வரியிடம், எதிர்முனையில் பேசிய நபர், காரமடை அடுத்துள்ள தோலம்பாளையம் ஜே.ஜே நகரில் 2 பெண்கள் சேர்ந்து சிறுவர்களை அடித்து துன்புறுத்துவதாகவும், அவர்கள் காயம் அடைந்துள்ளதாகவும் தெரிவித்து விட்டு இணைப்பை துண்டித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பரமேஸ்வரி, களப்பணியாளர் ரெபீனாவுடன் தோலம்பாளையம் ஜே.ஜே.நகர் பகுதியில் குறிப்பிட்ட அந்த வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு சென்று விசாரித்ததில், வீட்டில் இருந்த 2 பெண்களும் சேர்ந்து சிறுவர்களை தாக்கியது உறுதியானது. சிறுவர்களை தாக்கியதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டதில், பல அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
பெரியநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் 25 வயதான மஞ்சு. இவருக்கு ராஜீவ் காந்திநகரை சேர்ந்த 30 வயதான ரமேஷ் என்பவருடன் திருமணம் ஆகி, ராகுல், ரோஷன் என 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் கணவன், மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மஞ்சு தனது கணவரை பிரிந்துள்ளார். இதையடுத்து, அவர் பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள தாய் கோவிந்தம்மாள் வீட்டில் தனது மகன்களுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், வருமானத்திற்காக அங்குள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைக்கு சென்றுள்ளார். அப்போது அதே நிறுவனத்தில் வேலை செய்து வரும் 28 வயதான பிரியங்கா என்ற திருநம்பியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இவர்களின் பழக்கம் கள்ளக்காதலாக மாறியுள்ளது.
இதையடுத்து மஞ்சுவும், பிரியங்காவும் தோலம்பாளையத்தில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து கணவன், மனைவியாக வாழ்ந்து வந்துள்ளனர். இவர்களுடன் மஞ்சுவின் மகன்களும் வசித்து வந்தனர். இந்நிலையில், இவர்களின் உறவிற்கு சிறுவர்கள் இருவரும் இடையூறாக இருந்துள்ளனர். இதனால், கடந்த 9-ந் தேதி மஞ்சுவும், பிரியங்காவும் சேர்ந்து சிறுவர்களை தகாத வார்த்தைகளால் பேசி கடுமையாக தாக்கியுள்ளனர். மேலும், கத்தியை காட்டி கொன்று விடுவதாகவும் மிரட்டியுள்ளனர். அப்போது சிறுவர்கள் இருவரும், தங்களுக்கு வலிக்கிறது அடிக்க வேண்டாம் என்று கெஞ்சி உள்ளனர். ஆனால் கல் மனசு கொண்ட தாய் மற்றும் திருநம்பி கடுமையாக தாக்கியுள்ளனர். இருவரும் தாக்கியதில், சிறுவர்கள் இருவரின் முகம், தாடை, கழுத்து, கை, மூக்கு, கால்களில் காயம் ஏற்பட்டிருந்தது. இதனை பார்த்த அதிகாரிகள், சிறுவர்கள் இருவரையும் மீட்டனர். மேலும், சம்பவம் குறித்து காரமடை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்..
புகாரின் அடிப்படையில், இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் தலைமையிலான போலீசார் திருநம்பி பிரியங்கா மற்றும் சிறுவர்களின் தாய் மஞ்சு ஆகிய 2 பேரையும் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்டுத்தி, கோவை ஜெயிலில் அடைத்தனர்.