"மன உளைச்சலா இருந்துச்சு, அதான் குழந்தையை கொன்னுட்டேன்" பச்சிளம் குழந்தைக்கு தாய் செய்த கொடூரம்..
காஞ்சிபுரம் மாவட்டம், கலியனூர் பகுதியைச் சேர்ந்தவர் 23 வயதான உஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் செங்கல்பட்டில் உள்ள செல்போன் உதிரி பாகம் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் அதே நிறுவனத்தில் வேலை செய்து வரும் திண்டிவனத்தை சேர்ந்த நபர் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களின் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதனிடையே இருவரும் சேர்ந்து பல்வேறு இடங்களுக்கு சென்று உல்லாசமாக இருந்துள்ளனர். இதையடுத்து, நிஷா கர்ப்பம் தரித்துள்ளார். ஆனால் நிஷாவின் காதலன் அவரை திருமணம் செய்து கொள்ள மறுத்துள்ளார்.
இந்தநிலையில், திடீரென தனக்கு வயிற்று வலி ஏற்படுவதாக, நிஷா தனது அக்கா கணவரிடம் கூறியுள்ளார். இதையடுத்து, அவர் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் நிஷாவின் தாய் மருத்துவமனைக்கு வந்து அவரை திட்டி தீர்த்து உள்ளனர். இந்நிலையில், நேற்று நள்ளிரவு மருத்துவமனையில் இருந்து தப்பிய நிஷா, தனது குழந்தையை கலியனுர் பகுதியில் உள்ள பாழடைந்த கிணறு ஒன்றில் வீசி கொலை செய்துள்ளார். மறுநாள் காலை தாய் மற்றும் சேய் இல்லாததை அறிந்த மருத்துவர்கள் உடனடியாக காஞ்சிபுரம் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர்.
சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் நிஷாவை கண்டுபிடித்தனர். மேலும், அவரிடம் குழந்தை எங்கே என்று கேட்ட போது அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் நடத்திய கிடுக்குபிடி விசாரணையில், மன உளைச்சலில் குழந்தையை கிணற்றில் வீசியதாக நிஷா ஒப்புக்கொண்டார். இதையடுத்து, நிஷாவை கைது செய்த போலீசார், அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அப்பெண்ணின் காதலனிடமும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்ததாக தகவல் வெளியாகி வருகிறது.