For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

நீட் தேர்வு ரத்து தீர்மானத்துடன்... பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதம்...!

With the decision to cancel the NEET exam... CM Stalin's letter to PM Modi again
06:05 AM Jun 29, 2024 IST | Vignesh
நீட் தேர்வு ரத்து தீர்மானத்துடன்    பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதம்
Advertisement

மருத்துவம் பயில விரும்பும் மாணவர்களின் நலன் கருதி தேசிய அளவில் நீட் தேர்வை இரத்து செய்திட வலியுறுத்தி நேற்று (28-6-2024) சட்டமன்றப் பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு இத்தீர்மானத்தை இணைத்து இது தொடர்பாக கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

Advertisement

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு, நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்கவேண்டும் என்ற தமிழ்நாட்டின் தொடர்ச்சியான கோரிக்கையை மீண்டும் வலியுறுத்துவதாகவும், தேசிய அளவில் இந்தத் தேர்வு முறையை இரத்து செய்திட வேண்டுமென வலியுறுத்துவதாகவும் முதலமைச்சர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

தொழிற்கல்வி படிப்புகளுக்கான சேர்க்கை 12 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே இருக்க வேண்டும் என்றும், தனி நுழைவுத் தேர்வு அடிப்படையில் சேர்க்கை இருக்கக்கூடாது என்றும் தெரிவித்துள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், இந்தத் தேர்வு முறை மாணவர்களுக்குத் தேவையற்ற கூடுதல் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என்பது தமிழ்நாட்டினுடைய கருத்தாகும் எனத் தெரிவித்துள்ளார். அந்த வகையில், நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்கவும், 12 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை மேற்கொள்ளவும். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள். இதுதொடர்பான சட்டமுன்வடிவு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக ஏற்கெனவே அனுப்பி வைக்கப்பட்ட போதிலும், இதுநாள் வரையில் அக்கோப்பு நிலுவையில் உள்ளதாக தமது கடிதத்தில் வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே, சமீபத்தில் நடந்த நீட் தேர்வின்போது நடைபெற்ற முறைகேடுகள், நீட் தேர்விற்கெதிரான தமிழ்நாட்டின் நிலைப்பாட்டினை உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ள முதலமைச்சர் அவர்கள், பல மாநிலங்களும் இந்தத் தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டியதன் அவசியம் குறித்து தங்களது கருத்துக்களைத் தெரிவிக்கத் தொடங்கியுள்ளதாக தனது கடிதத்தில் கோடிட்டுக் காட்டியுள்ளார்.

இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 28-6-2024 அன்று, நீட் தேர்வு முறையை ரத்து செய்திட மத்திய அரசை வலியுறுத்தி ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் அவர்கள், நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்களிப்பதற்கான சட்ட முன்வடிவிற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவேண்டு என்றும், தேசிய அளவில் நீட் தேர்வு முறையைக் கைவிடும் வகையில் தேசிய மருத்துவ ஆணையச் சட்டத்தில் உரிய திருத்தங்களை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டுமென்றும் இந்தியப் பிரதமர் அவர்களை வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை நிறைவேற்றிய தீர்மானத்தின் நகலை தனது கடிதத்துடன் இணைத்து அனுப்பியுள்ளதாகத் தெரிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், இவ்விஷயத்தில் மாண்புமிகு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் விரைந்து தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement