’உங்க இஷ்டத்துக்கு கட்டணத்தை உயர்த்துவீங்களா’..? பள்ளி நிர்வாகம் மீது கொந்தளித்த பெற்றோர்கள்..!! பதாகைகளுடன் போராட்டம்..!!
பள்ளிக்கட்டண உயர்வை கண்டித்து பதாகைகளுடன் மாணவர்களின் பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் சென்னை மடிப்பாக்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மடிப்பாக்கம் கீழ்கட்டளையில் சுமார் 25 ஆண்டுகளாக Holy family Convent higher secondary school செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், திடீரென பள்ளி நிர்வாகத்தினர் பள்ளிக் கட்டணத்தை உயர்த்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மாணவர்களின் பெற்றோர்கள் கையில் பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பள்ளி நிர்வாகத்தினரை கண்டித்தும், திடீர் பள்ளிக்கட்டண உயர்வை திரும்பப் பெறக் கோரியும் போராட்டம் நடைபெறுகிறது. கடந்த முறை கட்டணத்தை விட தற்போது அதிக கட்டணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். அதாவது, கடந்த முறை பள்ளி நிர்வாகத்தால், பெறப்பட்ட ரூ.4,500 Term II கட்டணம், தற்போது ரூ.9500 முதல் ரூ.11,000 வரை வகுப்பு வாரியாக வசூலிக்கப்படுகிறது.
எந்தவொரு முன்னறிவுப்பும் இன்றி, கட்டணத்தை உயர்த்தியதால், மாணவர்களின் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சமச்சீர் கல்வியை பயிற்று விக்கும் இந்த பள்ளியின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், உயர்த்தப்பட்ட கட்டண உயர்வை மீண்டும் குறைக்க வேண்டுமென்றும் பள்ளிக்கல்வித்துறையை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்று வருகிறது. பாதுகாப்புக்காக அங்கு காவல்துறையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.