அதானியுடன் எந்த ஒப்பந்தமும் செய்யவில்லையா..? அப்படியென்றால் வெள்ளை அறிக்கை வெளியிடுங்கள்..!! கேட்கிறார் பிரேமலதா..!!
அதானியுடன் எந்த ஒப்பந்தமும் செய்யவில்லையென தமிழ்நாடு அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க் நீதிமன்றத்தில் இந்தியாவில் சூரிய ஒளி மின்சக்தி ஒப்பந்தங்களை கைப்பற்ற அரசு அதிகாரிகளுக்கு அதானி குழுமம் லஞ்சம் கொடுத்ததாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதில், தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதானி குழுமத்தைச் சேர்ந்த கௌதம் அதானி, அவரது உறவினர் உள்ளிட்ட 7 பேர் இந்தியாவின் 4 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசங்களில் சூரிய ஒளி மின்சக்தி ஒப்பந்தங்களை கைப்பற்ற சுமார் 2,029 கோடி ரூபாய் அளவில் லஞ்சம் கொடுத்திருப்பதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.
2021 - 2023ஆம் ஆண்டு வரையில், மாநில மின்சார வாரியங்களின் ஒப்பந்தங்களை கைப்பற்றவே அதானி குழுமம் பெருந்தொகையை கைமாற்றியிருப்பதாக குற்றஞ்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக எதிர்க்கட்சிகள் திமுக அரசை கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், தமிழ்நாடு அரசும், அமைச்சர் செந்தில் பாலாஜியும் அதானிக்கும் தங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என கூறியுள்ளன. இந்நிலையில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றம் குற்றம்சாட்டியுள்ளது.
அதானி குழுமத்துடன் எந்த ஒப்பந்தமும் செய்யவில்லை என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். ஆனால், ஊழல் புகாரை மறைத்தாலும் உண்மை நிலை என்ன? என்பது குறித்து தமிழ்நாடு அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்” என்று பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
Read More : பிரபல தமிழ் நடிகை சீதா வீட்டில் திருட்டு..!! எதை காணவில்லை..? போலீசில் பரபரப்பு புகார்..!!