போர் அடிக்குதா?… யூடியூப்பில் வீடியோஸ் மட்டுமல்ல!… இனி கேமும் விளையாடலாம்!… புதிய வசதியை இறக்கிய கூகுள்!
YouTube நாம் அனைவரும் இலவசமாக கண்டுகளித்து வருகிறோம். அதுமட்டுமல்லாமல், நாம் இதுவரை பல ஆப்களில் கேம்களை விளையாடி இருப்போம் அல்லது தனித்தனியாக பதிவிறக்கம் செய்து விளையாடி இருக்கிறோம். ஆனால் இப்பொழுது பிரபலமான வீடியோ ஸ்ட்ரீமிங் பயன்பாடான யூடியூப்பில் இப்பொழுது கேம் விளையாடும் ‘யூடியூப் பிளேயபிள்ஸ்’ (Google Playables) அம்சத்தை கூகுள் நிறுவனம் கொண்டு வந்துள்ளது. யூடியூப்பை மிகவும் வெற்றிகரமான தயாரிப்பாக மாற்றவும், யூடியூப்பில் பல்வேறு கேமிங் பிரியர்களை ஈர்க்கவும் இந்த அம்சத்தை கூகுள் வெளியிட்டுள்ளது. இந்தப் புதிய அம்சம் மூலம் பயனர்கள் பல்வேறு கேம்களை பதிவிறக்கம் செய்யாமல் அல்லது இன்ஸ்டால் செய்யாமலேயே விளையாட முடியும்.
இதனால் பயனர்கள் தங்களது ஸ்மார்ட்போனில் தேவையற்ற பயன்பாடுகளை பதிவிறக்கம் செய்யத் தேவை இல்லை. இது மக்களை அதிகமாக ஈர்க்கும். தற்போது சோதனைக்காக ஒரு சில விளையாட்டுகள் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அதில் ஆங்கிரி பேர்ட்ஸ் ஷோ டவுன், பிரைன் அவுட், டெய்லி கிராஸ்வேர்ட் மற்றும் ஸ்கூட்டர் எக்ஸ்ட்ரீம் ஆகியவை அடங்கும். மேலும், வரும் காலங்களில் பல கேம்களை சேர்க்க கூகுள் திட்டமிட்டுள்ளது. இது பயணத்தின்போது கேம்களை விளையாடுவதற்கு மிகவும் வசதியான வழியாகும். யூடியூப்பில் நேரடியாக கேம்களை விளையாடக்கூடிய இந்த அம்சம் தற்போது யூடியூப் பிரீமியம் சந்தாதாரர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. பிளேயபிள்ஸின் முழு வெளியீட்டிற்கான தேதியை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இந்த யூடியூப் பிளேயபிள் அம்சம் 2024ம் ஆண்டின் முதல் பாதியில் அனைத்து பயனர்களுக்கும் வழங்க கூகுள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.