ரயில் கட்டணம் உயர்வா?… புதிய திட்டத்துக்கு பிளான் போட்ட இந்திய ரயில்வே!… வருமானத்தை பெருக்க முடிவு!
விரைவு மற்றும் மின்சார ரயில் பெட்டிகளின் உட்பகுதிகளில் விளம்பரங்கள் செய்து, வருவாயை பெருக்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது.
ரயில்வேக்கு சொந்தமான காலி இடங்களை தனியார் நிறுவனங்களுக்கு குத்தகைக்கு விட்டு வருமானம் பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் ரயில் நிலையங்கள், ரயில் எஞ்சின்கள், ரயில் டிக்கெட்டுகள் ஆகியவற்றில், தனியார், பொதுத்துறை நிறுவனங்களின் விளம்பரங்களை இடம் பெறச் செய்து அதன் மூலம் ரயில்வே நிர்வாகம் வருவாய் ஈட்டி வருகிறது. தற்போது இதில் அடுத்தகட்டமாக ரயில் பெட்டிகளின் உட்புறத்திலும் சில இடங்களில் விளம்பரங்கள் செய்ய திட்டமிட்டு வருவதாக கூறுகிறார்கள்.
அதிலும் குறிப்பாக ரயில்களின் பெட்டிகளின் உட்பகுதியில் ஜன்னல் மேல் பகுதியில், இருக்கைகள், கதவுகள் உள்ளிட்ட இடங்களில் தனியார் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களின் விளம்பரங்களை செய்து, வருவாயை பெருக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. பொதுத்துறை அல்லது தனியார் வங்கிகள், ஐ.டி., நிறுவனங்கள், ஜவுளிக் கடைகள், நகைக் கடைகள், உணவு பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள் ஆகியவற்றின் விளம்பரங்களை, நிபந்தனைக்கு உட்பட்டு இடம் பெற செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
அனைத்து ரயில்வே கோட்டங்களிலும் இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இதற்காக, தனியார் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது. நீண்ட காலம் விளம்பரம் செய்வோருக்கு, கட்டண சலுகையும் அளிக்கப்படுகிறது.