Court: அமைச்சர் ஐ.பெரியசாமி தப்பிப்பாரா?… வீட்டு வசதி வாரிய நில ஒதுக்கீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு!
Court: வீட்டு வசதி வாரிய நில ஒதுக்கீடில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில், அமைச்சர் பெரியசாமியை விடுவித்த உத்தரவை, தாமாக முன்வந்து ஆய்வுக்கு எடுத்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பிக்கிறது.
கடந்த 2008ம் ஆண்டு வீட்டு வசதி வாரிய நிலத்தை, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பாதுகாவலருக்கு ஒதுக்கியதில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில், அமைச்சர் பெரியசாமி விடுவிக்கப்பட்டார். இந்த உத்தரவை ஆய்வு செய்யும் விதமாக, தாமாக முன்வந்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரணைக்கு எடுத்தார். அமைச்சர் பெரியசாமி சார்பில், டெல்லி மூத்த வழக்கறிஞர் ரஞ்சித்குமார், லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில், அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.
அப்போது அவர், அரசிடம் ஊதியம் பெறுபவர் பொது ஊழியர் என்பதால் ஆளுநரிடம் தான், வழக்கு தொடர அனுமதி பெற வேண்டும். அமைச்சர்களை நியமிக்கவும், நீக்கவும் ஆளுநருக்கு தான் அதிகாரம் உள்ளது என்பதால் வழக்கு தொடர அவர் தான் அனுமதி வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக சுட்டிக்காட்டினார். இந்த வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய மனுவுக்கு, லஞ்ச ஒழிப்புத்துறை, 2023 ஜனவரியில் தாக்கல் செய்த பதில் மனுவில், விடுவிக்க கோரிய மனு விசாரணைக்கு உகந்ததல்ல எனவும் வழக்கு சாட்சி விசாரணை துவங்கிய பின் இடையில் விடுவிக்க கோர முடியாது என்ற நிலைபாட்டை தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
குற்றச்சாட்டு பதிவுக்கு பின் குற்றம் சாட்டப்பட்டவர்களை விசாரணை நீதிமன்றம் விடுவிக்க முடியாது எனவும் தெரிவித்தார். இதையடுத்து, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், முறையான அனுமதி பெறவில்லை என்றால், ஏன் முறையான அனுமதியை ஆளுநரிடம் பெறவில்லை என லஞ்ச ஒழிப்புத் துறைக்கு கேள்வி எழுப்பினார். இன்னும் காலம் தாழ்ந்து விடவில்லை. இனிமேலும் சென்று ஆளுநர் அனுமதி பெறலாம் எனக் குறிப்பிட்ட நீதிபதி, விடுவிப்பை எதிர்த்து ஏன் மேல் முறையீடு செய்யவில்லை. லஞ்ச ஒழிப்புத் துறையின் செயல்பாடின்மை காரணமாகவே தாமாக முன் வந்து வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது என்றார்.
வழக்கில் இருந்து அமைச்சர் பெரியசாமியை விடுவித்த உடனேயே, லஞ்ச ஒழிப்புத் துறை, உரிய ஆவணங்களுடன் ஆளுநரை அணுகி வழக்கு தொடர அனுமதி பெற்றிருக்க வேண்டும் எனக் கூறிய நீதிபதி, சிறப்பு நீதிமன்றமும், ஆளுநரிடம் முறையாக அனுமதி பெறும்படி லஞ்ச ஒழிப்புத்துறை உத்தரவிடவில்லை எனத் தெரிவித்தார். வழக்கு நீண்ட தூரத்தை கடந்து விடவில்லை.
ஒரே ஒரு சாட்சி மட்டுமே விசாரிக்கப்பட்டுள்ளதால், ஆளுநரிடம் அனுமதி பெறலாம் எனக் குறிப்பிட்ட நீதிபதி, அமைச்சராக இருப்பவர் மக்கள் மத்தியில் சுத்தமானவராக இருக்க வேண்டும். அதிகாரத்தில் இருப்பவருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் எனக் கூறிய நீதிபதி, அனைத்து தரப்பு வாதங்கள் நிறைவடைந்து, இம்மாதம், 13ம் தேதி உத்தரவை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார். இந்த வழக்கில், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இன்று காலை உத்தரவு பிறப்பிக்கிறார்.
Readmore: ஆணவக் கொலையில் முடிந்த சாதி மறுப்பு திருமணம்.! பெண்ணின் உறவினர் நிகழ்த்திய கொடூரம்.!