ஜனவரியிலும் வடகிழக்கு பருவமழை தீவிரம் ஏன்?… எப்பொழுது முடிவுக்கு வரும்?
வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் சற்று தாமதமாக தொடங்கியது. அக்டோபர் மாதம் இரண்டாம் வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. முதல் இரண்டு வாரங்களுக்கு மிதமான மழை மட்டுமே பதிவானது. சுமார் 33% குறைவாக பதிவானது. நவம்பர் மாதம் இறுதியில் இருந்து வடகிழக்கு பருவமழை தீவிரமடைய தொடங்கியது. குறிப்பாக டிசம்பர் மாதம் 4 ஆம் தேதி மிக்ஜாம் புயக் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் அதி கனமழை பதிவானது. சுமார் 24 மணி நேரத்தில் 40 செ.மீ கடந்து மழை பதிவானது. இதனால் இந்த மாவட்டங்கள் வெள்ளக்காடாய் மாறின.
அதேபோல், டிசம்பர் 17,18 ஆகிய தேதிகளில் தென் மாவட்டங்களில் வளிமண்டல சுழற்சி காரணமாக வரலாறு காணாத மழை பதிவானது. தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்கள் முழுவதும் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாக பதிவானது. வழக்கமாக வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் முடிவுக்கு வரும். ஆனால் தற்போது மார்கழி மாதம் முடிவுக்கு வரும் நிலையில் வடகிழக்கு பருவமழை இன்னும் தொடர்கிறது. இதனால் தமிழ்நாட்டில் அனேக இடங்களில் மழை பதிவாகி வருகிறது.
இது தொடர்பாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தனது பேஸ்புக் பக்க பதிவில், “ கடந்த 4 ஆண்டுகளாக வடகிழக்கு பருவமழை ஜனவரி மாதத்திலும் தொடர்கிறது. வளிமண்டல சுழற்சி காரணமாக மழை பதிவாகி வருகிறது. தென் மாவட்டங்களில் பெய்து வரும் மழை மேற்கு நோக்கி நகரும். தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர், திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், மதுரை, கன்னியாகுமரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் வியாழன் முதல் மழை அளவு படிப்படியாக குறைந்து வரண்ட வானிலை நிலவும்” என தெரிவித்துள்ளார்.