’எதற்காக வரி கட்டுகிறோம்’..!! ’இது கேவலமான விஷயம்’..!! தமிழ்நாடு அரசை தாக்கிய விஷால்..!!
வங்கக் கடலில் உருவாகிய 'மிக்ஜாம்' புயல் காரணமாக சென்னையில் சூறைக்காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால், பல்வேறு சாலைகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. இந்நிலையில், கனமழைக்கு இதுவரை 5 பேர் பலியாகி உள்ளதாக சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது. வீடுகளில் பல இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது மக்களை கடும் அவதிக்குள்ளாக்கியுள்ளது. இந்நிலையில், நடிகர் விஷால் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், "புயல், மழையால் முதலில் மின்சாரம் துண்டிக்கப்படும். பின்னர் தண்ணீர் தேங்க ஆரம்பிக்கும். பின்னர், தண்ணீர் வீட்டுக்குள் நுழைந்துவிடும் என்பது வழக்கமான விஷயம். அதேபோல தான் அண்ணா நகரில் இருக்கும் என்னுடைய வீட்டில் தண்ணீர் நுழைந்துவிட்டது. அண்ணா நகரிலேயே இந்த கதி என்றால் மற்ற இடங்களில் யோசித்துப் பாருங்கள்.
2015இல் நடக்கும்போது எல்லோரும் இறங்கி வேலை செய்தோம். முடிந்த அளவுக்கு பொதுமக்களுக்கு சேவை செய்தோம். 8 ஆண்டுகளுக்கு பிறகும் அதைவிட மோசமாக இருப்பது கேள்விக்குறியாக உள்ளது. மழைநீர் சேமிப்பு, வடிகால் தொடர்பான மாநகராட்சியின் திட்டம் என்ன ஆனது எனத் தெரியவில்லை. நான் ஒரு வாக்காளர் என்ற முறையில் இதனை கேட்கிறேன். சென்னை தொகுதி எம்எல்ஏக்கள் தயவு செய்து வெளியில் வந்து சரிசெய்து கொடுத்தால் நன்றாக இருக்கும்.
அந்தந்த தொகுதி எம்எல்ஏக்கள் வெளியே வந்து உதவினால் பொதுமக்களுக்கு பாதுகாப்பாகவும் நம்பிக்கையாகவும் இருக்கும். என் வீட்டில் இருக்கும் அப்பா, அம்மா பயத்தில் உள்ளனர். சின்ன மழைக்கே தண்ணீர் தேங்கும். ஆனால், இப்போது எல்லா இடங்களிலும் தண்ணீர் தேங்கியிருப்பது தர்மசங்கடமான, கேவலமான ஒரு விஷயமாக பார்க்கிறேன். தயவு செய்து உடனடியாக இதனை சரி செய்ய மாநகராட்சி முன்வர வேண்டும். எதற்காக வரி கட்டுகிறோம் என கேட்க வைத்துவிடாதீர்கள். உதவுங்கள்" என அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.