டென்னிஸ் வீராங்கனையை மணம் முடித்தார் நீரஜ் சோப்ரா.. மணமகள் ஹிமானி யார் தெரியுமா..?
ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவின் ஹிமானி என்ற பெண்ணை மணந்துள்ளார். அவரது திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளன. திருமணப் புகைப்படங்களை வெளியிட்டுள்ள நீரஜ் சோப்ரா, "இந்த தருணத்தில் எங்களை ஒன்றிணைத்த ஒவ்வொரு ஆசீர்வாதத்திற்கும் நன்றி. மகிழ்ச்சியுடன், அன்பால் இணைந்திருப்போம்" என்று பதிவிட்டுள்ளார்.
மிகவும் எளிமையான முறையில், உறவினர்கள் மற்றும் சில நண்பர்கள் முன்னிலையில் நீரஜ் சோப்ரா திருமணம் நடைபெற்றது. இது தொடர்பான எந்த தகவலும் சமூக வலைதளங்களிலோ அல்லது ஊடகங்களிடமோ நீரஜ் சோப்ரா தரப்பு தெரிவிக்கவில்லை. தனது திருமண புகைப்படங்களை நீரஜ் நோப்ரா சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அதன் பிறகே இந்த திருமணம் குறித்து பலருக்கும் தெரியவந்தது. ரசிகர்கள், பிரபலங்கள் பலரும் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
2020-ஆம் ஆண்டு நடைப்பெற்ற டோக்கியோ ஒலிம்பிக் ஆடவருக்கான ஈட்டி எறிதல் போட்டியில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று அசத்தினார். இதன் மூலம் ஒலிம்பிக்கில் தடகளப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாறு படைத்தார். மேலும் கடந்த ஆண்டு நடைபெற்ற பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளி வென்றார். நீரஜ் சோப்ராவை கரம்பிடித்திருக்கும் ஹிமானி மோர் ஒரு டென்னிஸ் வீராங்கனை. அமெரிக்காவின் லூசியானா பல்கலைக்கழகத்தில் பயின்றவர். மேலும் பிராங்க்ளின் பியர்ஸ் பல்கலைக்கழகத்தில் பகுதிநேர டென்னிஸ் பயிற்சியாளராகவும் பணியாற்றினார்.
நீரஜ் சோப்ரா மனைவி யார்?
நீரஜ் சோப்ரா ஹிமானி மோர் என்ற இளம்பெண்ணைத் திருமணம் செய்துள்ளார். ஹிமானி மோருக்கு தற்போது 25 வயதாகிறது. அவர் ஹரியானா மாநிலத்தில் உள்ள சோனிபட்டைச் சேர்ந்தவர். ஹிமானி சோனிபட்டில் உள்ள லிட்டில் ஏஞ்சல்ஸ் பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை முடித்துள்ளார்.
பள்ளி காலத்திலே படிப்பு மட்டுமின்றி விளையாட்டிலும் ஆர்வத்துடன் இருந்து வந்துள்ளார். நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதல் வீரராக இருப்பது போல, ஹிமானி டென்னிஸ் வீராங்கனை ஆவார். தற்போது விளையாட்டு மேலாண்மைப் படிப்பை அமெரிக்காவின் நியூ ஹாம்ப்ஷையரில் உள்ள ஃப்ராங்க்ளின் பியர்ஸ் பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். முன்னதாக பள்ளிப்படிப்பை முடித்த பிறகு, டெல்லியில் உள்ள கல்லூரியில் அரசியல் அறிவியல் மற்றும் உடற்கல்வி பிரிவில் பட்டப்படிப்பை முடித்துள்ளார்.
சிறு வயது முதலே டென்னிஸ் போட்டிகளில் ஆர்வத்துடன் பங்கேற்று வரும் ஹிமானி பல போட்டிகளில் பங்கேற்றுள்ளார். தேசிய அளவில் பல டென்னிஸ் போட்டிகளில் ஆடியுள்ள ஹிமானி இந்திய டென்னிஸ் தரவரிசையில் மகளிர் ஒற்றையர் பிரிவில் 42வது இடத்திலும், இரட்டையர் பிரிவில் 27வது இடத்திலும் உள்ளார்.