ஹரியானா, ஜம்மு காஷ்மீரில் அரியணை யாருக்கு?. இன்று வாக்கு எண்ணிக்கை!. பரபரப்பில் அரசியல் களம்!
Vote count: ஹரியானா மற்றும் ஜம்மு - காஷ்மீர் மாநில சட்டப் பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (அக்.8) நடைபெறுகிறது.
ஹரியானாவில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெறும் என்றும், ஜம்மு - காஷ்மீரில் தேசிய மாநாடு - காங்கிரஸ் கூட்டணி மிகப்பெரிய கட்சியாக உருவெடுக்கும் என்றும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. ஹரியானா, ஜம்மு - காஷ்மீர் ஆகிய இரு மாநிலங்களிலும் வாக்கு எண்ணும் பணி இன்று காலை 8 மணி முதல் துவங்குகிறது. முற்பகல் 11 மணி அளவில் முன்னணி நிலவரம் மற்றும் யார் ஆட்சி அமைக்கப் போகிறார்கள் என்பது குறித்து ஓரளவு தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்தியில் பாஜக ஆட்சியில் இருந்தாலும், கடந்த மக்களவைத் தேர்தலில் அக்கட்சி தனிப்பெரும்பான்மையை இழந்தது. இந்நிலையில், இன்று நடைபெறும் இரு மாநிலத் தேர்தல் முடிவில், கருத்துக்கணிப்புகள் உண்மையானால், அது பாஜகவுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படும்.
ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி, மாநிலத்தில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கும் என கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நம்பிக்கை தெரிவித்தார். மேலும், ஆட்சி அமைப்பதற்கான ஏற்பாடுகளுடன் தாங்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
ஹரியானாவில் 90 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக கடந்த சனிக்கிழமை அன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. அம்மாநிலத்தில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகளில் அமைதியாக தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் 65.65 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
இதேபோல், ஜம்மு - காஷ்மீரில் சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு சட்டப் பேரவைத் தேர்தல் கடந்த மாதம் 18, 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக நடத்தப்பட்டுள்ளது. இத்தேர்தலில் மொத்தம் 63.45 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. மறுசீரமைப்புக்குப் பின்னர், 90 சட்டப் பேரவைத் தொகுதிகளைக் கொண்ட ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி (என்சி) கூட்டணியாகவும், பாஜக மற்றும் மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) ஆகியவை தனித்தும் தேர்தலை சந்தித்துள்ளன. இங்கு மும்முனைப் போட்டி நிலவுகிறது. 28 பெண் வேட்பாளர்கள் உட்பட 415 வேட்பாளர்களின் தலைவிதி இன்றைய வாக்கு எண்ணிக்கையில் தீர்மானிக்கப்பட உள்ளது.
Readmore: இன்று இந்திய விமானப்படை தினம்!. ஏன் கொண்டாடப்படுகிறது?. என்ன வரலாறு?