'திராவிட மாடல்' என்று சொன்னால் கோபம் வருகிறது..!! நாங்க பயந்துகிட்டு மூலையில் ஒடுங்கிக் கிடக்க மாட்டோம்..!! கொந்தளித்த CM ஸ்டாலின்..!!
'திராவிட மாடல்' என்று சொன்னால் கோபம் வருகிறது என்றால் பயந்துகொண்டு மூலையில் ஒடுங்கிக் கிடக்க மாட்டோம் என்று முதலமைச்சர் முக.ஸ்டாலின் பேசியுள்ளார்.
கடந்த சில மாதங்களாகவே சீமானின் நடவடிக்கைகள் பிடிக்காமல், நாம் தமிழர் கட்சியில் இருந்து நிர்வாகிகள் கூண்டோடு விலகி வந்தனர். சமீபத்தில், பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் சீமான் பேசி வருவதை கண்டித்து, மேலும் சில மாவட்ட நிர்வாகிகளும் அக்கட்சியில் இருந்து வெளியேறினார். இந்நிலையில், நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகியவர்கள் அனைவரும் ஒருங்கிணைக்கப்பட்டு, திமுகவில் இணைந்து கொண்டனர்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சரும், திமுக தலைவருமான முக.ஸ்டாலின் தலைமையில், நாம் தமிழர் கட்சியினர் மற்றும் மாற்றுக்கட்சியினர் என மொத்தம் 3,000-க்கும் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். கட்சியில் இணைந்தவர்களுக்கு திமுகவின் துண்டை அணிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார்.
இதனைத் தொடர்ந்து பேசிய முதலமைச்சர் முக.ஸ்டாலின், ”பிற கட்சியில் பணியாற்றிய நீங்கள், உங்கள் தலைமை முறையாக செயல்படாததால் திமுகவில் இணைந்துள்ளீர்கள். திமுக ஒன்றும் நேற்று முளைத்த காளான் அல்ல. 1949ஆம் ஆண்டில் அண்ணா வடசென்னையில் கொட்டும் மழையில் தொடங்கிய இயக்கம். நாம் தமிழர் கட்சி என்ற பெயரை சொல்லவே நாங்கள் இப்போது தயாராக இல்லை. தமிழருக்காக பாடுபடும் கட்சி என்றால் கூட அந்த கட்சியின் பெயரை சொல்லலாம்.
தற்போது கட்சி ஆரம்பிப்பவர்கள் உடனேயே ஆட்சி அதிகாரத்தில் அமர்வதாக பிதற்றிக் கொண்டிருக்கிறார்கள். இப்போது அனாதையாக சுற்றிக் கொண்டிருப்பவர்கள், நாங்கள் தான் அடுத்த முதலமைச்சர் என பிதற்றிக் கொண்டிருக்கிறார்கள். வேஷம் கட்டிக்கொண்டு திரிபவர்களை அடையாளப்படுத்த நான் விரும்பவில்லை. திராவிட மாடல் என்று சொன்னாலே சிலர் ஆவேசம் அடைகிறார்கள். அதேபோல், 'திராவிட மாடல்' என்று சொன்னால் கோபம் வருகிறது என்றால் பயந்துகொண்டு மூலையில் ஒடுங்கிக் கிடக்க மாட்டோம். தொடர்ந்து திராவிட மாடல் என்று சொல்லிக்கொண்டே இருப்போம்.
மதத்தை மையமாக வைத்து ஆளுநர் பேசி வருவதால் திமுகவுக்கான ஆதரவு அதிகரிக்கிறது. எனவே, தமிழக ஆளுநரை தயவு செய்து மாற்றி விடாதீர்கள் என்று பிரதமர், உள்துறை அமைச்சருக்கு கோரிக்கை வைக்கிறேன். 7-வது முறையாக நிச்சயமாக திமுக தான் ஆட்சி அமைக்கும் என உறுதியாக சொல்கிறேன்” என்றார்.