’ஆமைக்கறி சாப்பிடதெல்லாம் பொய்’..!! ’ஒரிஜினல் போட்டோ என்கிட்ட மட்டும்தான் இருக்கு’..!! ’பிரபாகரனுக்கு சீமான் யாரென்றே தெரியாது’..!! உண்மையை உடைத்த பிரபலம்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரபாகரனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் போலியானவை என்றும் அதை எடிட் செய்து கொடுத்ததே நான்தான் என்று இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் கூறியிருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அந்த புகைப்படம் எடிட் என்பதற்கான ஆதாரத்தை காட்டுங்கள் என்று சீமான் கூறியிருந்தார்.
அதுமட்டுமின்றி, பிரபாகரனின் அண்ணன் மகன் கார்த்திக் மனோகரன் கூறுகையில், பிரபாகரனை சீமான் சந்தித்தது உண்மை தான். அந்த சந்திப்பு வெறும் 8 முதல் 10 நிமிடங்கள் வரை மட்டுமே நடந்தது. என்னைவிட ஈழத்திற்கு ஆவணப்படம் எடுக்க வந்த ஒளிப்பதிவாளர் சந்தோஷ் பேசினால், இன்னும் அதிகமான உண்மைகள் வெளிவரும் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் தான் ஒளிப்பதிவாளர் சந்தோஷ், தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “சேரலாதன் மூலமாக தான் பிரபாகரனுக்கு சீமான் அறிமுகமானார். அதுவரை சீமானை யாரென்றே பிரபாகரனுக்கு தெரியாது. சீமான் - பிரபாகரன் சந்திப்பு உண்மை தான். இந்த சந்திப்பு 2008ஆம் ஆண்டு பிப்.13ஆம் தேதி நடைபெற்றது. அந்த சந்திப்பு வெறும் 8 முதல் 10 நிமிடங்கள் வரை மட்டுமே இருந்தது. சீமான் சொல்வதுபோல், என் சித்தியுடன் (பிரபாகரனின் மனைவி) பழகியதெல்லாம் கிடையாது. சீமானும் பிரபாகரனும் உணவு அருந்துவதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை. அதுவும் சீமான் கூறியதுபோல ஆமைக்கறி, இட்லி கறி சாப்பிட்டதெல்லாம் பொய் என்று தெரிவித்தார்.
மேலும், சீமான் ஆயுதங்களுடன் இருப்பது போன்ற புகைப்படத்தை என் கேமராவில் தான் படமெடுத்தேன். அந்த ஆதாரம் என்னிடம் உள்ளது. தற்போது சீமான் பிரபாகரனுடன் எடுத்துக் கொண்டதாக கூறப்படும் புகைப்படம் போலியானது. ஏனென்றால் புகைப்படங்கள், வீடியோ என்னிடம் மட்டுமே உள்ளது. விடுதலை புலிகளை சீமான் சமையல்காரர்களை போல் மாற்றிவிட்டார். ஈழத் தமிழர்களின் விருந்தோம்பல் மிகச்சிறப்பாக இருக்கும். அவர்களை போல் விருந்தோம்பலில் சிறந்தவர்களே கிடையாது.
மற்றவர்களுக்கு நடந்த விஷயங்களை தனக்கு நடந்ததாக சீமான் பொய் கூறி வருகிறார். பிரபாகரனை சீமான் சந்திக்கும் போது, அங்கு தமிழேந்தி இருந்ததாகவும், சீமான் தான் தமிழை ஏந்தி பிடித்திருப்பதாகவும் கூறுகிறார். ஆனால், இந்த சம்பவம் தராசு சந்திரசேகரனுக்கு நடந்த ஒன்று. மேலும், உச்சக்கட்ட போரின் போது ஆமைக்கறி உள்ளிட்ட உணவுகள் அங்கு பரிமாறப்பட்டன. ஆனால், சீமானுக்கு ஆமைக்கறி கிடைக்கவில்லை. அவருக்கு உடும்பு கறி மட்டுமே பரிமாறப்பட்டது. நான் ஈழத்தில் 7 மாதங்கள் தங்கியிருந்தேன். நாம் சாப்பிடுவதை குறிப்பெடுக்கும் கட்டமைப்பு விடுதலை புலிகளிடம் கிடையாது” என்று தெரிவித்துள்ளார்.