”மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் எப்போது”..? முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவிப்பு..!!
மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய மத்திய குழுவை அனுப்ப கோரிக்கை வைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”விழுப்புரம் மாவட்டம் இதுவரை கண்டிராத மழையை சந்தித்துள்ளது. புயல் சென்ற அனைத்து இடங்களிலும் வழக்கத்தைவிட அதிக அளவு மழை பெய்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அமைச்சர்கள், அலுவலர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.
கனமழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் பாதுகாப்பு மற்றும் மீட்பு பணிகளை மேற்கொள்ள மீட்பு குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட இடங்களில் 147 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. 3 மாவட்டங்களில் 7,826 பேர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மழை வெள்ளத்தால் 1,29,000 ஏக்கர் பயிர்கள் சேதம் அடைந்துள்ளது. உயிரிழந்த குடும்பங்களுக்கு, மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கைகளை உடனே மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளேன். மேலும், விரிவான ஆய்வுக்கு பிறகே முழுமையான சேத விவரம் குறித்து தெரியவரும். புயல் சேதம் குறித்து விரைவில் மத்திய அரசுக்கு அறிக்கை அளிப்போம். மத்திய குழுவை உடனே அனுப்பும்படி மத்திய அரசிடம் கோர உள்ளோம்” என்று தெரிவித்தார்.