பள்ளிகள் எப்பொழுது திறக்கப்படும்...? வரும் 27-ம் தேதி அதிகாரிகள் ஆலோசனை...!
மாநில கல்வித் துறை அதிகாரிகள் மே 27 அன்று பள்ளிகளை மீண்டும் எப்பொழுது திறப்பது என்பது குறித்து விவாதிக்க ஆலோசனைக் கூட்டத்தை நடத்த உள்ளனர்.
தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மார்ச் 1 முதல் ஏப்ரல் 8-ம் தேதி வரை நடைபெற்றது. நாடாளுமன்ற தேர்தல் காரணமாக முன்கூட்டிய ஆண்டு பொதுத் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டன. 1 முதல் 3-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்ரல் 2 முதல் 5-ம் தேதி வரையும், 4 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 2 முதல் 23-ம் தேதி வரையும் ஆண்டு இறுதித் தேர்வுகள் நடைபெற்றன.
அதைத் தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு ஏப்ரல் 24-ம் தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் முதல் வாரம் அல்லது இரண்டாவது வாரத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஜூன் 4-ம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் மற்றும் கோடை மழை காரணமாக தமிழகத்தில் அடுத்த கல்வியாண்டுக்கான பள்ளிகள் திறப்பதில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது.
அறிக்கைகளின்படி, மாநில கல்வித் துறை அதிகாரிகள் மே 27 அன்று பள்ளிகளை மீண்டும் எப்பொழுது திறப்பது என்பது குறித்து விவாதிக்க ஆலோசனைக் கூட்டத்தை நடத்த உள்ளனர். ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னர் பள்ளிகள் எப்பொழுது திறக்கப்படும் என்ற தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக ஜூன் இரண்டாவது வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என்று கூறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.