மக்களே...! டெங்கு, மலேரியா, பன்றிக் காய்ச்சல் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்...? தெரிஞ்சுக்கோங்க
பருவமழை பெய்துவரும் இக்காலகட்டத்தில் டெங்கு, சிக்குன்குனியா, மலேரியா மற்றும் பன்றிக் காய்ச்சல் போன்ற தொற்றுநோய்கள் மற்றும் சாதாரண சளி, காய்ச்சல் போன்றவற்றை தடுக்கவும், உரிய நேரத்தில் கட்டுப்படுத்தவும் மாவட்ட நிர்வாகம் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
டெங்கு மற்றும் இதர காய்ச்சல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்தும், பருவமழைக்காலம் என்பதாலும், அண்டை மாநிலங்களில் டெங்கு காய்ச்சல், நோய் பரவல் உள்ளதாலும் கொசு புழு ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொது மக்களுக்கு கனிவான, சிறப்பான மருத்துவ சேவைகளை முறையாக வழங்கவும் மருத்துவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
டெங்கு கொசுக்கள் நல்ல தண்ணீரில் மட்டுமே உற்பத்தியாகிறது என்பதால் வீட்டின் உள்ளே மூடப்படாமல் நீண்ட நாட்களாக சேகரித்து வைக்கும் தண்ணீர் பாத்திரங்களை மூடி வைத்திடவும், தொட்டிகள், குளிர்சாதனப் பெட்டிகளின் பின்புறம் தேங்கும் தண்ணீரை குறிப்பிட்ட கால இடைவெளிகளில் சுத்தம் செய்திடும் பொதுமக்களுக்கு அதிகளவில் விழிப்புணர்வை ஏற்படுத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேவைப்படும் இடங்களில் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு, இம்முகாம்கள் மூலமாக காய்ச்சலுக்குரிய சிகிச்சை, மருந்து, மாத்திரைகள், விழிப்புணர்வு மற்றும் நிலவேம்புக் குடிநீர் ஆகியவை வழங்க வேண்டும். இதனைத்தவிர்த்து, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் காய்ச்சலுக்கான தனி வெளிநோயாளிகள் பிரிவு செயல்பட்டு வருகிறது. மேலும் அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் தேவையான மருந்து, மாத்திரைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, அங்கீகாரம் பெற்ற மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இன்றி மருந்துக் கடைகளில் காய்ச்சலுக்கான மருந்து, மாத்திரைகளை தானாக சிகிச்சை எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும், சாதாரண சளி, காய்ச்சல் ஏற்பட்டால் அதனை அலட்சியப்படுத்தாமல் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் அங்கீகாரம் பெற்றுள்ள மருத்துவர்களிடம் சென்று உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.