புயல் நேரத்தில் மக்கள் செய்ய வேண்டியது என்ன?… முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இதோ!
'மிக்ஜாம்' புயல், இன்று சென்னை வழியே ஆந்திராவுக்கு செல்கிறது. இதனால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், சூறாவளி காற்றுடன் அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால், 'ரெட் அலெர்ட்' விடப்பட்டு உள்ளது. மிக்ஜாம் புயல் நெருங்கி வருவதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்களுக்கு தமிழக அரசு சார்பில் பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது. அந்த அறிவுறுத்தல்கள் என்னவென்று பார்ப்போம்.
புயல் தொடர்பான அரசின் அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே பின்பற்றவேண்டும். புயல் தொடர்பாக பரவும் வதந்திகளை நம்பக்கூடாது.செல்போன்களை முழுமையாக ஜார்ஜ் செய்து வைத்துக்கொள்ளவேண்டும். முக்கிய ஆவணங்கள், சான்றிதழ்கள், பொருட்களை வெள்ள நீர் புகாத இடத்தில் பத்திரப்படுத்த வேண்டும். பூனை, நாய் உள்ளிட்ட வளர்ப்பு பிராணிகளை கட்டிப்போடக்கூடாது. புயல் தொடங்கியவுடன் மின் இணைப்பை துண்டிக்க வேண்டும். சிலிண்டர் இணைப்பை மூடி வைக்க வேண்டும்.
பள்ளமான இடத்தில் வீடு இருந்தால் பாதுகாப்பான இடத்திற்கு செல்லவேண்டும். புயலின்போது வெளியில் இருக்கும் பட்சத்தில் பாதுகாப்பான இடத்திற்கு செல்லவேண்டும்.மரம், மின் கம்பங்கள், சேதமடைந்த கட்டடங்கள் பக்கத்தில் இருப்பதை தவிர்க்க வேண்டும். சாலையில் மின் கம்பிகள் அறுந்து கிடக்கிறதா என்பதை கவனித்து அதன்பின்னே செல்லவேண்டும். புயலின்போது மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். அத்தியாவசிய பொருட்களான பால், மருந்துப்பொருட்கள் உள்ளிட்டவற்றை கையிருப்பில் வைத்திருக்க வேண்டும்.
ஆபத்தான இடங்களிலும், நீர் நிலைகளுக்கு அருகிலும் நின்று செல்ஃபி எடுக்கக்கூடாது. மாநில அவசரகால செயல்பாட்டு மையம் எண் 1070 -1077 ஆகிய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. வாட்ஸ் அப்பில் 94458-69848 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். மெழுகுவர்த்தி, கைமின் விளக்கு (torch light), தீப்பெட்டி, மின்கலங்கள் (batteries), மருத்துவ கட்டு (band aid), உலர்ந்த உணவு வகைகள், குடிநீர், மருந்துகள் மற்றும் குளுகோஸ் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய அவசர உதவி பெட்டகத்தை தயாராக வைத்திருக்க வேண்டும்.