குழந்தைகளை வீட்டில் தனியாக விட்டு செல்கிறீர்களா.? உங்களுக்குத்தான் இந்த செய்தி.!
தற்போதுள்ள காலகட்டத்தில் அம்மா அப்பா இருவருமே வேலைக்கு செல்லும் சூழ்நிலையில் குழந்தைகளை வீட்டில் தனியாக விட்டுச் செல்லும் பெற்றோர்கள் பலர் இருக்கின்றனர். இதனால் குழந்தைகள் என்ன செய்கிறார்கள் என்பதை கவனிக்க முடியாமல் போகிறது என்று பல பெற்றோர்களுக்கும் வருத்தமாக உள்ளது. சூழ்நிலை காரணமாக வேலைக்கு செல்லும் கட்டாயத்தினால் குழந்தைகளை வீட்டில் தனியாக விட்டுச் செல்லும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
ஆனால் குழந்தைகளை இப்படி தனியாக விட்டுச் செல்வதற்கு முன்பாக குழந்தைகளுக்கு பாதுகாப்பிற்காக ஒரு சில விஷயங்களை கற்று கொடுப்பது நல்லது. குழந்தைகளுக்கு என்னென்ன பழக்கங்களை கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதை குறித்து இப்பதிவில் தெளிவாக பார்க்கலாம்.
குழந்தைகள் வீட்டில் தனியாக இருக்கும்போது கதவை தட்டும் சத்தமோ அல்லது காலிங் பெல் சத்தமோ கேட்டால் உடனடியாக ஓடி சென்று கதவை திறந்து பார்க்க கூடாது. வெளியே யார் இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொண்ட பிறகு கதவை திறக்க வேண்டும் என்பதை கட்டாயமாக குழந்தைகளுக்கு சொல்லித் தர வேண்டும். மேலும் வீட்டில் தனியாக இருக்கும் குழந்தைகளுக்கு அம்மா, அப்பா அல்லது நெருக்கமான உறவினர்களின் தொலைபேசி எண்கள் கட்டாயமாக தெரிந்திருக்க வேண்டும். குழந்தைகளால் நியாபகம் வைத்துக் கொள்ள முடியாவிட்டால் வீட்டில் இந்த எண்களை எழுதி வைத்து விட்டு செல்லலாம்.
மேலும் தீயணைப்பு எண், காவல் நிலைய எண், ஆம்புலன்ஸ் எண் போன்றவற்றை எழுதி வைத்துவிட்டு, எவ்வாறு இவர்களை அழைக்க வேண்டும் என்பதையும் சொல்லிக் கொடுக்க வேண்டும். குழந்தைகள் தனியாக வீட்டில் இருக்கும் போது கத்தி, தீப்பெட்டி, கண்ணாடி, மருந்து பொருட்கள் போன்றவை குழந்தைகளின் கைக்கு எட்டாத உயரத்தில் வைத்திருக்க வேண்டும். திடீரென்று விபத்து ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதையும் கண்டிப்பாக சொல்லித் தர வேண்டும். இவ்வாறு ஒரு சில விஷயங்களை சொல்லி தருவதன் மூலம் குழந்தைகள் வீட்டில் தனியாக இருந்தாலும் பாதுகாப்பாக இருப்பார்கள்.