என்னது?… தாஜ்மஹால் இந்து கோவிலா?… 22 அறைகள் பூட்டப்பட்டுள்ளதா?... நீங்காத மர்மம்!
காதல் மனைவி மும்தாஜின் நினைவாக உத்தரப்பிரதேசத்தின் ஆக்ரா நகரில் யமுனை நதிக்கரை ஓரமாக முகலாய பேரரசர் ஷாஜகானால் தாஜ்மஹால் கட்டப்பட்டது. 1632 முதல் 1653 ஆம் ஆண்டு வரை இதன் கட்டுமானப் பணி நடைபெற்றுள்ளது. வெண்மை நிறத்தில் அழகிய கட்டிட கலையுடன் கட்டப்பட்ட இதை தினசரி லட்சக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர். வெளிப்புறத்தில் அழகு பதுமையாக காட்சியளிக்கும் தாஜ்மஹாலுக்கு உள்ளே பல மர்மங்கள் புதைந்து இருப்பதாகவும், குறிப்பிட்ட மதத்துக்கு சொந்தமான வழிபாட்டுத் தலம் என்றும் அதற்குள் சிலைகள் இருப்பதாகவும் கட்டுக்கதைகளும், சதி கோட்பாடுகளும் காலம் காலமாக பகிரப்பட்டு வருகின்றன. ஆனால், அவற்றை வரலாற்று ஆய்வாளர்கள், தொல்லியல் துறையினர் தொடர்ந்து மறுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த ஆண்டும் குறிப்பிட்ட வழக்கு ஒன்று தள்ளுபடி செய்யப்பட்டது. தாஜ்மஹாலில் பூட்டப்பட்டு இருப்பதாக கூறப்படும் சுமார் 22 அறைகளை ஆய்வு செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற ஒருவரின் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டன. பூட்டப்பட்டுள்ள 22 அறைகள், அறைகளே இல்லை என இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வளைவான நீண்ட பாதையில் ஆங்காங்கே அறை கதவுகள் போன்று பொருத்தப்பட்டு உள்ளதாகவும், அந்த இடத்தை சிறப்பாக பயன்படுத்த முடியும் என்றும் தொல்லியல் துறை ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து தாஜ்மஹாலில் பணிபுரிந்து வரும் தொல்லியல்துறை பணியாளர் ஒருவர் கூறுகையில், தாஜ்மஹாலின் அறைகள் வாரத்துக்கு ஒரு முறை அல்லது 15 நாட்களுக்கு ஒரு முறை தூய்மை செய்யப்படுவதாகவும் அந்த நீண்ட பாதையில் அறைகளை போன்ற தடுப்புச் சுவர்கள் இல்லை எனவும் அவர் தெரிவித்து இருக்கிறார்.
"சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கும் அப்பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்வதில்லை என்பதால் கதவுகள் பூட்டப்பட்டு கிடக்கின்றன. தாஜ்மஹாலின் அடித்தளத்தில் எந்த விதமான மர்ம வரலாறும் கிடையாது. பார்வையாளர்கள் அதிகம் செல்லாத அப்பகுதி பாதுகாப்பு காரணங்களுக்காக மூடப்பட்டு உள்ளது என்றும் தொல்லியல் ஆய்வுத்துறை அதிகாரி கூறியுள்ளார். தாஜ்மஹாலின் அடித்தளத்தில் எந்தவிதமான மதம் சார்ந்த குறியீடுகளும் கிடையாது என்கிறார். "முகலாயர்கள் ஆட்சிக்காலத்தில் இதுபோன்ற கட்டிட வடிவமைப்புகள் சாதாரணமானவை. ஹுமாயூனின் கல்லறை மற்றும் சப்தர்ஜங்கின் கல்லறைகளிலும் இதுபோன்ற அடித்தளங்கள் உள்ளன என்று இந்திய தொல்லியல் ஆய்வுத் துறையின் வடக்கு மண்டல இயக்குநராக பணியாற்றி கடந்த 2012 ஆம் ஆண்டு ஓய்வுபெற்ற கே.கே.முஹம்மது கூறியுள்ளார்.