உங்கள் குழந்தைகளை செல்போன் பழக்கத்தில் இருந்து மீட்க சூப்பர் டிப்ஸ்..!! பெற்றோர்களே இதை டிரை பண்ணிப் பாருங்க..!!
இன்றைய டிஜிட்டல் யுகத்தில் அனைவரிடமும் ஸ்மார்ட்ஃபோன் இருக்கிறது. குழந்தைகள் கூட தங்களுக்கு ஏற்ற வகையில் வித விதமான வசதிகளை உள்ளடக்கிய ஸ்மார்ட்ஃபோன்களை வைத்துள்ளனர். ஸ்மார்ட் ஃபோனால் பல்வேறு விதமான நன்மைகள் இருக்கின்றன என்றாலும், பல குழந்தைகள் ஸ்மார்ட்போனுக்கு அடிமையாகி விடுகின்றனர் என்பது சற்று ஆபத்தான விஷயமாகும்.
குறிப்பாக, ஆன்லைனில் கிடைக்கும் பல்வேறு வசதிகள் நன்மையை தருவதற்கு பதிலாக குழந்தைகளை அதற்கு அடிமையாக்கி நீண்ட நேரம் ஸ்மார்ட்ஃபோனிலும் ஆன்லைனிலும் செலவழிக்கும்படி செய்து விடுகிறது. நீண்ட நேரம் ஸ்மார்ட்ஃபோனில் செலவழிக்கும் குழந்தைகள் எதிர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்ள வாய்ப்புகள் அதிகரிக்கிறது.
நீண்ட நேரம் ஸ்மார்ட்ஃபோன் பயன்படுத்துவதால் கண் பிரச்சனைகள் போன்ற உடல்நல கோளாறுகள் ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் உண்டு. இதனால், பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை கண்காணித்து ஸ்மார்ட்ஃபோனுக்கு பதிலாக புத்தகங்கள் மற்றும் கதைகள் படிப்பதை ஊக்குவிக்க வேண்டும். நீண்ட நேரம் ஸ்மார்ட்ஃபோன் மற்றும் டிவி பார்ப்பதை கட்டுப்படுத்த வேண்டும். அந்த வகையில் எவ்வாறு உங்கள் பிள்ளைகளை ஸ்மார்ட்ஃபோன் அடிமைத்தனத்திலிருந்து வெளிக்கொண்டு வருவது என்பதை பற்றி இப்போது பார்ப்போம்.
மற்ற விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் :
ஸ்மார்ட்ஃபோன் பயன்படுத்துவதற்கு பதிலாக முதலில் தங்களது வீட்டுப்பாடங்களை முடிக்க அறிவுறுத்த வேண்டும். மேலும், படிக்க வேண்டிய பாடங்களை அன்றன்றே படிக்குமாறு அவர்களை வழி நடத்தி அவர்கள் சரியாக செய்கிறார்களா? என்பதை மேற்பார்வையிட வேண்டும். இது போன்ற நேரங்களில் அவர்கள் ஸ்மார்ட்ஃபோன் மட்டுமின்றி வேறு எந்த எலக்ட்ரானிக் சாதனங்களையும் பயன்படுத்துவதை கட்டுப்படுத்த வேண்டும்.
திட்டங்களை வகுக்க வேண்டும் :
உங்கள் பிள்ளைகளை ஸ்மார்ட்ஃபோன் பழக்கத்தில் இருந்து தள்ளி வைக்க வேண்டுமெனில் முதலில் நீங்கள் ஒரு கட்டுக்கோப்பான திட்டத்தை வகுக்க வேண்டும். அந்தத் திட்டத்தின் படி உங்களது குழந்தைகளுக்கு அளிக்க வேண்டிய பொறுப்புகளை அளித்து அதன் மூலம் அவர்களை வழிநடத்த வேண்டும். சில பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் ஒரு குறிப்பிட்ட வேலையை செய்து முடித்தால் ஸ்மார்ட்ஃபோன் பயன்படுத்தலாம் என்பது போன்று ஒரு வழிமுறையை பின்பற்றி வருகின்றனர். இது ஆரம்பத்தில் நேர்மறையாக தோன்றினாலும் காலப்போக்கில் குழந்தைகளின் எண்ணத்தில் எதிர்மறை எண்ணங்களை உண்டாக்கும்.
செயல்பாடு அடிப்படையிலான கற்றலை ஊக்குவிக்க வேண்டும்:
எப்போதும் ஸ்மார்ட்ஃபோனில் நேரத்தை செலவழிக்காமல் வெளியே சென்று மற்றவர்களுடன் விளையாடவும் வேறு பல செயல்பாடுகளிலும் ஈடுபட்டு புதிய முறையில் கற்றலை ஊக்குவிக்க வேண்டும். கேளிக்கை பூங்காக்களுக்கு செல்வது புதுவித சவால்களை மேற்கொள்வது என்பது போன்றவற்றை அவர்களுக்கு அறிமுகப்படுத்துவதன் மூலம் பிள்ளைகள் தாங்களாகவே சிக்கல்களையும், சவால்களையும் சந்திக்க கற்றுக் கொள்வார்கள்.