மரணத்துக்குப் பின் என்ன நடக்கும்..? ஆன்மா எங்கு இருக்கும்..? ஒரு அமானுஷ்ய அலசல்..!!
மரணத்துக்கு அப்பால்..? மரணத்துக்குப் பின் வாழ்க்கை..? என்பதெல்லாம் நமக்குப் புரிபடாமல் இருப்பதால்தான் மனித வாழ்க்கை சுவாரஸ்யமாக உள்ளது. 'ஆன்மா என்றுமே அழியாது. அழிவு என்பது நம் உடலுக்கு மட்டும்தான். நம்முடைய வினைகளின் காரணமாகவே நமக்குப் பிறவி ஏற்படுகிறது. மரணம் சம்பவித்து வினைப் பயன் முடிந்ததும் ஆத்மாவானது, தான் கொண்டிருக்கும் உடலைத் துறந்துவிடுகிறது. ஆனால், பிறவியில் செய்த வினைகளுக்கு ஏற்ப மறுபடியும் அந்த ஆத்மா ஒரு பிறவி எடுக்கிறது. இதுதான் காலம்காலமாக சொல்லப்பட்டு வரும் பிறவி மற்றும் ஆத்மா பற்றிய தத்துவம். புராணங்களும் இப்படித்தான் சொல்கின்றன.
மனிதன் இறந்த பின்பு அவனுடைய ஆன்மா எப்படி இருக்கும்? எங்கெல்லாம் பயணம் செய்ய முடியும் என்று கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. அது தொடர்பாக உண்மை தான் என்ன தெரியுமா? ஒரு மனிதன் இறந்த பின் முதல் 9 நாட்கள் அவர்கள் வாழ்ந்த இடத்துக்கு மிக அருகிலேயே ஆன்மாக்கள் வலம் வரும். குறிப்பாக முதல் மூன்று நாட்கள் நீரிலும், நான்காவது நாள் முதல் ஆறாம் நாள் வரை நெருப்பிலும் ஏழாம் நாள் முதல் ஒன்பதாம் நாட்கள் வரையில் ஆகாயத்திலும் ஆன்மாக்கள் உலா வரும் என்று கூறப்படுகிறது.
உயிர் என்பது உடலின் இயக்கத் தன்மையை குறிப்பது. உடலில் எந்தவொரு இயக்கமும் நடைபெறவில்லை என்றால் அங்கே உயிர் என்பது இல்லை என அர்த்தம். உடலில் இயக்கம் நின்றுவிட்டாலும் கூட, ஆன்மாவாகிய நினைவு சில கணங்கள் நிலைத்திருக்கும். உடலில் இருந்து இயக்கமும், ஒட்டுமொத்த நினைவும் பிரிந்தால் தான் அது முழுமையான மரணம். இருப்பினும் மரணம் என்பது வெறும் உடலுக்கு மட்டும் தான். ஆன்மாவிற்கு அல்ல. ஒரு மனிதன் இறந்த பின்னும் அவனது ஆன்மாவாகிய ஒட்டுமொத்த நினைவுகளும் மீண்டும் இந்த பிரபஞ்சத்திலயே கலக்கிறது. இதனை தான் யாராவது ஒருவர் இறந்துவிட்டால், “அன்பான அந்த நல்லாத்மா எங்கிருந்து வந்ததோ அங்கேயே சென்று சேர்ந்துவிட்டது” என்பார்கள்.
கடந்த 4 ஆண்டுகளாக சுமார் 1000 பேரிடம் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சிறப்பான மருந்துகளின் துணையோடு, மரணமடைந்த உடலினைச் சிதைக்காமல் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மரணம் நேரிட்ட 18 நிமிடங்களுக்குப் பிறகு உடல் நினைவு இழந்த நிலையில், பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது நவீன முயற்சிகளால் இறந்துபோன உடலின் வாக்குமூலங்களையும் தொகுத்து வைத்துள்ளனர். அவை பொதுவாக, உடலில் இருந்து உயிர் பிரிவது போன்ற நினைவுகள், தெய்வீக ஆற்றலால் ஆட்கொள்ளப்பட்டு மிதத்தல் போன்ற உணர்வு, ஒளியில் ஜொலிக்கும் ஆற்றல், அமைதி நிலை, மரண வேளையின் அனுபவம் எனப் பல்வேறு உணர்வுகள் பகிரப்பட்டுள்ளன. பெரும்பாலும் எல்லோரின் நிலையும் ஒரே மாதிரியாக இருந்தது ஆச்சர்யம் என ஜெர்மன் மருத்துவக்குழு கூறியது.
அதே சமயம், 1944ஆம் ஆண்டில் உலகப் புகழ் பெற்ற உளவியல் நிபுணர் கார்ல் ஜங் என்பவர் சுவிட்சர்லாந்து நாட்டில் தனக்கு உண்டான மாரடைப்பும் அப்போது உருவான அசாதாரண சூழல் பற்றியும் எழுதியுள்ளார். அதில், உடலை விட்டு அவரின் உயிர் பிரிந்து சென்றதாகவும், இந்த பூமியை சில மைல்கள் தொலைவில் மேலே இருந்து கண்டதாகவும் கூறியுள்ளார். அதேபோல், கனக்டிகட் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த கென்னத் ரிங் என்பவர் 1980இல் மரணத்தின் இறுதிவரை சென்று வந்த சுமார் 100 பேரிடம் மரணத்துக்குப் பிந்தைய நிலையினைக் கேட்டு அறிந்தார்.
அவற்றில் பாதிக்கும் மேலானோர் பெற்ற அனுபவத்தில் ஒற்றுமை இருந்தது. அவை உயிர் நின்று போன ஒரு சூழலில் ஆழ்ந்த அமைதி, ஒளிவெள்ளம், உடலை விட்டு உயிர் சிறிய வலியோடு பிரிவது, இருட்டு சுரங்கப் பாதையை உயிர் அடைவது, வெளிச்சத்தைக் காண்பது, வண்ணமயமான ஒளியினை அடைவது என ஒரே மாதிரியான பதில்களை கூறியிருக்கின்றன. மேலும், அதிசயமாக பிறவியிலேயே பார்வை அற்றவர்கள் கூட தங்கள் உடலை விட்டுப் பிரிந்த பின் பூமியையும், விண்ணையும் தெளிவாகக் கண்டதை சொல்லியிருக்கிறார்கள்.
அதிலும் கருடபுராணம் சொல்லும் மரணத்துக்குப் பிந்தைய மானிடரின் நிலை சுவாரஸ்யமானது. தூங்குவதும், விழிப்பதும் போலானது. மரணம் என்பது உணர்வு. அதை மற்றவர்களுக்கு உணர்த்தவே முடியாது. எனினும் இன்று வரை உலகில், மரணம் என்பதும் மரணத்துக்குப் பிந்தைய வாழ்வு என்பதும் புதிர் மட்டுமல்ல, சுவாரஸ்யமான நிலையும் கூட. மரணத்தை வெல்லும் காலம் கூட வரலாம். அப்போது மனித வாழ்க்கை அலுப்பாகி விடும். உரிய வயதில் விடை பெறுவதுதான் உயர்வான விஷயம். அப்போதுதான் சொர்க்கம், நரகம் என்பவையும் சுவாரஸ்யமாக இருக்கும். அறிவியல் ஆராய்ச்சிகள் உடலை விட்டு ஆன்மா நீங்கும்போது பார்க்க, பேச, கேட்க, உணர முடிகிறது என்பதை உறுதிப்படுத்துகின்றன என்றால் நமது புராணங்கள் கூறியவை யாவும் உண்மை தானே எண்ணத் தோன்றுகிறது? மரணம் மனிதருக்கு இறுதியானதா? இல்லவே இல்லை என்றுதான் தோன்றுகிறது.