1982-ல் செயற்கை இதயம் பொருத்தப்பட்ட மனிதனுக்கு நடந்தது என்ன?
மனித உடலில் இதயம் மிக முக்கியமான உறுப்பு ஆகும். இது நம் உடலின் பல்வேறு பகுதிகளுக்கு இரத்தத்தை கொண்டு செல்வதுடன், மிக முக்கியமாக நம்மை வாழ வைக்கிறது. இதய நோய் காரணமாக மட்டும் ஆண்டுக்கு சுமார் 600,000 பேர் இறக்கின்றனர் என்று ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 100,000 பேர் இதய செயலிழப்பால் பாதிக்கப்படுகிறார்கள். இதய செயலிழப்பு மோசமான நிலையை அடைந்தால், 60-94% இதய நோயாளிகள் 1 வருடத்தில் இறந்துவிடுவார்கள் என்று கூறப்படுகிறது.
இதய நோய்க்கு சிகிச்சையளிக்க சந்தையில் பல மருந்துகள் உள்ளன, ஆனால் நோய் ஒரு குறிப்பிட்ட கட்டத்தை அடைந்தவுடன், மருந்துக்குப் பிறகு எஞ்சியிருக்கும் ஒரே வழி இதய மாற்று அறுவை சிகிச்சை. ஆனால் அதற்கு இதய நோயாளிகள் நன்கொடையாளர் பட்டியலில் காத்திருக்க வேண்டும்.. ஏற்கனவே ஆயிரக்கணக்கான நோயாளிகள் இதயத்திற்காக காத்திருக்கின்றனர்.. கடந்த பல ஆண்டுகளாக பல மருத்துவர்கள் இதயம் தொடர்பான தங்கள் கோட்பாடுகளை புதிய உயிர்காக்கும் தொழில்நுட்பங்களாக மாற்றியுள்ளனர். அதன் உச்சம் தான் இன்று செயற்கை இதயம் என்று அழைக்கப்படுகிறது.
அந்த வகையில் இதய மாற்று அறுவை சிகிச்சை விஷயத்தில், 1982, டிசம்பர் 2-ம் தேதி மிகவும் முக்கியமானது. இந்த நாளில் தான், உலகில் முதல் முறையாக, நோயாளி ஒருவருக்கு செயற்கை இதயம் மாற்றப்பட்டது. மருத்துவ உலகில் இது மிகப்பெரிய சாதனையாக கருதப்பட்டது. அமெரிக்காவைச் சேர்ந்த பல் மருத்துவர் பார்னே கிளார்க்-கிற்கு இந்த செயற்கை இதயம் பொருத்தப்பட்டது. டாக்டர் பார்னே கடுமையான இதய நோயுடன் போராடிக் கொண்டிருந்த நிலையில், அவரை காப்பாற்றுவது கடினமாக இருந்தது. அதனால் தான் செயற்கை இதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்தனர்.
செயற்கை இதயத்தை யூட்டா பல்கலைக்கழகத்தின் இருதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் வில்லியம் டிவ்ரீஸ் பொருத்தினார். இந்த அறுவை சிகிச்சை 7 மணி நேரம் நீடித்தது. உட்டா பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின்படி, டாக்டர் பார்னேவின் உடலில் இருந்து பாதிக்கப்பட்ட இதயம் அகற்றப்பட்டபோது, மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அந்த இதயம் கிழிந்த காகிதம் போல் இருந்ததாக மருத்துவர்கள் கூறினர்.. டாக்டர் வில்லியம் அதற்கு பதிலாக ஒரு புதிய செயற்கை இதயத்தை பார்னேவின் உடலில் பொருத்தினார்.
அறுவை சிகிச்சை வெற்றிகரமாக அமைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்… அறுவை சிகிச்சைக்குப் பிறகு, நோயாளி குணமடைந்ததையும் மருத்துவர்கள் உறுதிப்படுத்தினார். உலகம் முழுவதும் இந்த செய்தியை தலையங்கமாக வெளியிட்டன.. பார்னேவுக்கு பொருத்தப்பட்ட இதயத்தின் பெயர் ஜார்விக்-7. இந்த செயற்கை இதயம் டாக்டர் ராபர்ட் ஜார்விக் என்பவரால் செய்யப்பட்டது.
செயற்கை இதயம் மனித இதயத்தை விட பெரியதாக இருந்தது. அதன் வேலைத் திறனும் அதிகமாக இருந்தது. ஒரு மனிதனின் இதயம் ஒரு நிமிடத்தில் 65 முதல் 80 முறை துடிக்கிறது, ஆனால் டாக்டர் பார்னேயின் உடலில் பொருத்தப்பட்ட செயற்கை இதயம் ஒரு நிமிடத்தில் 116 முறை துடித்தது. அதுமட்டுமின்றி, அதன் எடையும் மனித இதயத்தை விட அதிகமாக இருந்தது.
செயற்கை இதயம் அலுமினியம் மற்றும் பாலியூரிதீன் ஆகியவற்றால் செய்யப்பட்ட கருவி வடிவில் இருந்தது. செயற்கை இதயம் பொருத்தப்பட்ட டாக்டர் பார்னே 112 நாட்கள் உயிருடன் இருந்தார்… எனினும் செயற்கை இதய மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு, டாக்டர் பார்னேவுக்கு உள் இரத்தப்போக்கு பிரச்சனை தொடங்கியது. இதை தொடர்ந்து பல உறுப்புகள் செயலிழக்க தொடங்கியது.. இதனால், செயற்கை இதய மாற்று அறுவை சிகிச்சை நடந்த 112 நாட்களுக்கு பிறகு பார்னே இறந்துவிட்டார்.
Read more | உடல் அழகை கெடுக்கும் தொப்பையை விரைவில் குறைப்பது எப்படி..? சூப்பர் டிப்ஸ் இதோ..!!