தோனி சொன்னது இப்போ நடந்துடுச்சு!… ஜடேஜாவை தேடி தேடி போன பந்துகள்!… மீம்ஸ்களை தெறிக்கவிடும் ரசிகர்கள்!
இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜா 2009 ஆம் ஆண்டு சர்வதேச அரங்கில் அறிமுகமானதில் இருந்து மூன்று விதமான ஆட்டங்களிலும் இந்திய அணியின் ஒரு முக்கிய வீரராக உள்ளார். அவர் அடிக்கடி மிடில் ஆர்டரில் களம் புகுந்து கணிசமான ரன்களை வழங்கியிருந்தாலும், இடது கை சுழலில் அவர் தொடர்ந்து அசத்தி வந்திருக்கிறார். கடந்த 14 ஆண்டுகளாக விலைமதிப்பற்ற சொத்தாக இருந்துவருகிறார்.
இந்தநிலையில், மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற முதலாவது அரையிறுதியில் முன்னாள் சாம்பியனான இந்திய அணி, நியூசிலாந்துடன் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் களம் இறங்கினர். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய வீரர்கள் ரோகித் 47 ரன்கள், கில் 79 ரன்கள், விராட் கோலி 117 ரன்கள், ஸ்ரேயாஸ் ஐயர் 105 ரன்கள் எடுத்தனர். அதன்படி 50 ஓவர்கள் முடிவில் 397 எடுத்தது.
398 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் கான்வே, ரச்சின் ரவீந்திரா ஆகியோர் ஷமியின் மிரட்டல் பந்துவீச்சால், ஆட்டமிழந்தனர். இதையடுத்து, இந்தியாவுக்கு பதற்றத்தை காட்டிய வில்லியம்சஸ், மிட்செல் இருவரும் பார்ட்னர்ஷிப் போட்டு திணறவைத்தனர். இதையடுத்து, மீண்டும் ஷமியின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகளை இழந்தனர் நியூசிலாந்து வீரர்கள். அதிகபட்சமாக மிட்செல் அதிக அளவாக 134 ரன்கள், வில்லியம்சன் 69 ரன்கள், பிலிப்ஸ் 41 ரன்கள் எடுத்தனர். இந்திய அணியில் ஷமி 7 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார். இந்த போட்டியில், ரவீந்திர ஜடேஜாவின் பங்கு இந்தியாவின் வெற்றிக்கு பெரும் உதவியாக இருந்தது.
அடுத்தடுத்த 3 கேட்சுகளை பிடித்து ஜடேஜா மைதானத்தில் 4 புறமும் உற்சாகத்துடன் விளையாடினார். அதாவது, மூன்று கேட்சுகளும் வெவ்வேறு இடங்களில் அடிக்கப்பட்டன. ஆனால் அங்கெல்லாம், எதிர்பாராதவிதமாக ஜடேஜா நிறுத்தப்பட்டிருந்தார். 42.5 வது ஓவரில் பிலிப்ஸ், 43.5வது ஓவரில் மார்க் சாப்மேன் அடித்த பந்தை ஜடேஜா கேட்ச் பிடித்து அசத்தினார். இதேபோல், 45.2 வது ஓவரில் மிட்செல் அடித்த பந்தை ஜடேஜா கேட்ச் பிடித்தார். இதனை கேலி செய்யும் வகையில் ரசிகர்கள் மீம்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர். தோனி ஒருமுறை கூறியிருந்தார், பந்தை தேடி ஜடேஜா வரத்தேவையில்லை, பந்தே அவரைத் தேடி போகும் என்று கூறியிருந்தது, இந்த உலகக்கோப்பை அரையிறுதிப்போட்டியில் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.