10-ம் வகுப்பு தேர்வு ஆள்மாறாட்டம்.! பாஜக எம்எல்ஏ விடுதலை செல்லும்.! சென்னை உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.!
ஆள்மாறாட்டம் செய்து பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய வழக்கில் பாஜக எம்எல்ஏ விடுதலை செய்தது செல்லும் என உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியிருக்கிறது. இது தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதி ஜெயச்சந்திரன் எம்எல்ஏ கல்யாணசுந்தரத்தின் விடுதலை செல்லும் என்று தீர்ப்பு வழங்கி இருக்கிறார்.
கடந்த 2011 ஆம் ஆண்டு என்ஆர் காங்கிரஸ் கட்சியின் சார்பில் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட கல்யாணசுந்தரம் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான அமைச்சரவையில் கல்வித்துறை அமைச்சராக செயலாற்றி வந்தார். அப்போது பள்ளிக்கல்வித்துறை நடத்திய பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தனித் தேர்வாளராக தேர்வு எழுதி இருந்தார் அமைச்சர் கல்யாண சுந்தரம்.
இந்தத் தேர்வின் போது அவர் போலியான ஆவணங்களை தயாரித்து ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியதாக தமிழக காவல்துறை இவர் மீது வழக்கு பதிவு செய்தது. இதனைத் தொடர்ந்து திண்டிவனம் நீதிமன்றம் இவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது. இதனை எதிர்த்து விழுப்புரம் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். பின்னர் இந்த வழக்கு திண்டிவனம் அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
2013 ஆம் ஆண்டு வழக்கு விசாரணையின் போது கல்யாணசுந்தரம் மற்றும் அவருக்கு உதவியதாக கூறிய ஆசிரியர்களின் மீதான குற்றங்களுக்கு போதுமான ஆதாரங்கள் இல்லை எனக் கூறி திண்டிவனம் நீதிமன்றம் இந்த வழக்கை தள்ளுபடி செய்தது. மேலும் குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரையும் விடுதலை செய்து அறிவித்தது. இந்த தீர்ப்பிற்கு எதிராக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன் பாஜக எம்எல்ஏ கல்யாண சுந்தரம் விடுதலை தொடர்பான திண்டிவனம் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு செல்லும் எனக் கூறி தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்திருக்கிறார்.