தவெக மாநாட்டில் தொண்டர்களுக்காக செய்யப்பட்டுள்ள சிறப்பம்சங்கள் என்னென்ன..? விஜய் எப்போது பேசுவார்..?
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் இன்று நடைபெறவுள்ளது. இன்று பிற்பகல் 3.15 முதல் 4 மணிக்குள் விஜய் மாநாட்டு அரங்கத்திற்கு வருகை தர உள்ளார். இந்த மாநாட்டில் நடிகர் விஜய் தனது அரசியல் கட்சியின் கொள்கைகளை அறிவிக்க உள்ளதால் பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மாநாடு நடக்கும் இடத்தில் தொண்டர்களுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள சிறப்பம்சங்கள் என்னென்ன..? என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
நடிகர் விஜய்யின் இன்றைய மாநாட்டுக்கு 60 அடி அகலம், 170 அடி நீளத்துக்கு மேற்கூரையுடன் மேடை அமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 55,000 இருக்கைகள் போடப்பட்டுள்ளது. மேலும், 20 ஆயிரம் இருக்கைகள் போடும்படியாக இடம் காலியாக உள்ளது. மேடைக்கு முன் நுழைவாயில் வரை விஜய் உள்ளிட்ட விஐபிக்கள் மேடைக்கு வருவதற்கு நடைபாதையும் தனியே அமைக்கப்பட்டுள்ளது. மேடையில் இருந்து 800 மீட்டர் தொலைவுக்கு விஜய் நடந்து சென்று ரசிகர்களை சந்திக்கும் வகையில் ரேம்ப் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அரசியல் மாநாட்டுக்காக மொத்தம் 200-க்கும் அதிகமான ஏக்கரில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வாகன நிறுத்தம், உணவு சாப்பிடும் இடம், கழிவறை வசதி, குடிநீர் வசதி, ஆம்புலன்ஸ்கள் நிறுத்தும் இடங்கள் என்று தனித்தனி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுமார் 85 ஏக்கர் பரப்பளவுக்கு மாநாட்டு திடல் அமைக்கப்பட்டுள்ளது. மாநாட்டின் நுழைவாயிலில் 100 அடி கொடி கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. ரிமோட் மூலம் அந்த கொடி கம்பத்தில் அக்கட்சி தலைவர் விஜய் கொடி ஏற்றி வைத்து முதன்முறையாக அரசியல் சிறப்புரையாற்ற உள்ளார்.
மாநாட்டு அரங்கின் நுழைவாயிலில் தமிழக தலைமைச் செயலகம், ஜார்ஜ் கோட்டை வடிவமைக்கப்பட்டுள்ளது. கட்சியின்கொடியில் இடம்பெற்றுள்ள 2 போர் யானைகள் கால்களை தூக்கியபடி தொண்டர்களை வரவேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மாநாட்டில் அம்பேத்கர், பெரியார், காமராஜர், விஜய் மற்றும் சுதந்திரப் போராட்ட வீராங்கனைகளான வேலு நாச்சியார், அஞ்சலையம்மாள் ஆகியோரின் கட் அவுட்கள் வைக்கப்பட்டுள்ளன. அதேபோல் தமிழன்னை, சேர, சோழ, பாண்டியர் மன்னர்கள், தீரன் சின்னமலை கட் அவுட்களும் இடபெற்றுள்ளன.
ஒவ்வொரு மாவட்டங்களில் இருந்து வருவோருக்கும் தனித்தனியாக இருக்கைகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தொண்டர்கள் சிரமமின்றி மாநாட்டை பார்க்க 40 எல்இடி திரைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேடைக்கு முன் நுழைவாயில் வரை விஜய் உள்ளிட்ட விஐபிக்கள் மேடைக்கு வருவதற்கு தனியே நடைப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. விஜய் 'ரேம்ப்வாக்' செய்து பேசவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாநாட்டுக்கு முக்கிய பிரமுகர்கள், திரைத்துறையை சார்ந்தவர்கள் வருகை தர உள்ளனர். இதனால் 6 கேரவன் வசதி கொண்ட வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. மதிய வேளையில் தொண்டர்களை மகிழ்விக்க கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாநாட்டிற்கு வருபவர்களுக்கு ஸ்நாக்ஸ் வழங்கப்பட உள்ளது. பிஸ்கட், மிக்சர், வாட்டர் பாட்டில் உள்ளடக்கிய சுமார் 5 லட்சம் ஸ்நாக்ஸ் பாக்கெட்டுகள் வழங்கப்பட உள்ளது. பாதுகாப்பு பணிக்காக ஐ.ஜி அஸ்ராகார்க், விழுப்புரம் சரக டிஐஜி திஷாமித்தல் தலைமையில் விழுப்புரம் எஸ்பி தீபக்சிவாச் உள்ளிட்ட 10 எஸ்பிக்கள், 50 டிஎஸ்பிக்கள், 150 இன்ஸ்பெக்டர்கள் என 4,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
Read More : வெற்றிடத்தை நிரப்புமா தமிழக வெற்றிக் கழகம்..? விக்கிரவாண்டியில் இன்று பிரம்மாண்ட மாநாடு..!!