களைகட்டும் சென்னை..!! குவியும் நடிகர், நடிகைகள்..!! பிரம்மாண்டமாக நடக்கும் கலைஞர் நூற்றாண்டு விழா..!!
சென்னையில் இன்று மாலை திரையுலகம் சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என்று அனைத்து மொழி திரையுலகில் இருந்தும் சூப்பர் ஸ்டார் நடிகர்கள் சென்னையில் குவிந்துள்ளனர். தமிழ் திரையுலகை தனது வசனங்களால் சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்த கலைஞரின் நூற்றாண்டு விழாவினை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தலைமையில் அனைத்து திரையுலக சங்கங்களும் இணைந்து இன்று ஜனவரி 6ஆம் தேதி சென்னை கிண்டியில் உள்ள ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் சிறப்பாக நடத்த உள்ளது.
விஜயகாந்த் மறைவுக்கு அஞ்சலி செலுத்த வராத விஷால், சென்னைக்கு திரும்பியுள்ளார். வரிசையாக நடிகர் சூர்யா, கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்ட நடிகர்கள் நேற்று விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். அதே சமயம் இன்று திரையுலக விழாவிலும் கலந்து கொள்கின்றனர். இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் மு.பெ. சாமிநாதன், நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த் மற்றும் தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள், தெலுங்கு திரையுலகில் சிரஞ்சீவி, வெங்கடேஷ், மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால், கன்னட பட உலகில் சிவராஜ்குமார் மற்றும் பாலிவுட்டிலும் முன்னணி நட்சத்திரங்கள் என அனைத்து மொழி நட்சத்திரங்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்த விழாவில் கலை நிகழ்ச்சிகள், கருணாநிதி வசனம், பாடல்கள் எழுதிய படங்களில் இருந்து பல புதுமையான காட்சி அமைப்புகள், கலைஞரை பற்றி இதுவரை வெளிவராத தகவல்கள், ஆவணப் படங்கள் என பல தரப்பட்ட பொழுது போக்கு அம்சங்கள் நடைபெறவுள்ளன. இந்தவிழாவை பிரம்மாண்டப்படுத்தும் வகையில் டெல்லியில் இருந்து ட்ரோன்கள், பிரம்மாண்டமான ஷோக்கள், 50-க்கும் மேற்பட்ட முன்னனி இயக்குனர்கள், 20-க்கும் மேற்பட்ட நடன மாஸ்டர்கள் ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர். மிகப்பெரிய மேடை, 20,000 பேர் அமர்ந்து பார்க்கும் இருக்கைகள், 50-க்கும் மேற்பட்ட எல்.இ.டி திரைகள் என அனைத்து ஏற்பாடுகளும் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் மேற்பார்வையில், பெப்சி பணியாளர்கள் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.