சுத்தம் செய்யாத ஹெல்மெட்டால், கட்டாயம் முடி கொட்டும்... சுத்தம் செய்வது எப்படி?
அன்றாடம் நாம் பயன்படுத்தும் பொருள்களில் ஒன்று தான் ஹெல்மெட். சட்டத்தின் படி, வண்டி ஓட்டுபவரும் அவருடன் பயணிப்பவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். இதனால் தினமும் பலர் ஹெல்மெட் பயன்படுத்துகிறார்கள். ஆனால் தினமும் பயன்படுத்தும் ஹெல்மெட்டை சுத்தம் செய்கிறோமா? இந்த கேள்விக்கு பலரின் பதில் இல்லை என்பதாகத்தான் இருக்கும். இப்படி நாம் ஹெல்மெட்டை பல நாட்கள் சுத்தம் செய்யாமல் அழுக்குடன் பயன்படுத்தினால், அதில் உள்ள கிருமிகள் மற்றும் பூஞ்சைகள் நோய் தொற்றுக்களை ஏற்படுத்துவதோடு தலையில் பொடுகு, அரிப்பு மற்றும் முடி உதிர்வுக்கு காரணமாகி விடும். இதனால் நாம் ஹெல்மெட்டை அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும். ஹெல்மெட் பயன்படுத்தாத சமயங்களில், அதை ஒரு சுத்தமான பையில் போட்டு வைக்கலாம். இப்போது ஹெல்மெட்டை எப்படி சுத்தம் செய்வது என்பதை பற்றி அறிந்துகொள்வோம்.
ஒரு வேலை உங்கள் ஹெல்மெட்டில் கேமரா, ப்ளூடூத் போன்ற உபகரணங்கள் இருந்தால், சுத்தம் செய்யும் போதும் முதலில் அதை நீக்கிவிடுங்கள். உங்களது ஹெல்மெட்டின் மேல் பகுதியை அகற்ற முடியும் என்றால் அதனை அகற்றி விட்டு சுத்தம் செய்வது நல்லது. ஹெல்மெட்டை சுத்தம் செய்ய நீங்கள் சோப்பு மற்றும் ஷாம்பை பயன்படுத்தலாம். சோப்பு மற்றும் ஷாம்பூவை நீரில் கலந்து, ஹெல்மெட்டின் வெளிப்புறத்தில் தெளித்து விடுங்கள். ஹெல்மெட்டில் உள்ள வைசர் மிகவும் அழுக்காக இருந்தால் அதனை தனியே கழற்றி ஊற வைத்து சுத்தம் செய்ய வேண்டும். நன்கு அழுத்தி துடைக்கும் போது அதில் உள்ள அழுக்குகள் நீங்கும்.
கைகளை வைத்து சுத்தம் செய்ய முடியாத அளவிற்கு குறுகலான பகுதியாக இருந்தால், நீங்கள் பட்ஸ் பயன்படுத்தி சுத்தம் செய்யலாம். ஹெல்மெட்டின் லைனர் பகுதியை தான் நாம் முக்கியமாக சுத்தம் செய்ய வேண்டும். ஏனென்றால், நம் தலையில் உள்ள அழுக்கு, தூசி போன்றவை இதில் படிந்து விடுகிறது. இதனை தனியாக எடுத்து ஷாம்பூ கலந்த நீரில் ஊறவைத்து, சிறிது நேரம் கழித்து நன்கு கழுவி காய வைத்து விடுங்கள். இதை காய வைக்க டிரையர் பயன்படுத்த கூடாது. வெயில் இருந்தால் வெயிலில் காயவைப்பது சிறந்தது. இல்லையென்றால், காற்றாடியை பயன்படுத்தி காயவையுங்கள். ஹெல்மெட்டை நன்கு சுத்தம் செய்து காயவைத்து விட்டு, சிறிது நேரம் நிழலில் வைக்கவும். உங்களால் ஒவ்வொரு வாரமும் சுத்தம் செய்யுங்கள். இல்லையென்றால், மாதம் ஒரு முறையாவது கட்டாயம் சுத்தம் செய்யுங்கள்..
Read more: நைட் ஷிப்ட் பார்ப்பவரா நீங்கள்? அப்போ உங்களுக்கான snacks இது தான்..