பரபரப்பில் வயநாடு!. பிரியங்கா காந்திக்கு எதிராக களமிறங்கும் குஷ்பு?. பாஜகவின் மாஸ்டர் பிளான்!
Khushbu: காங்கிரஸ் வேட்பாளராக பிரியங்கா காந்தி அறிவிக்கப்பட்டுள்ள வயநாடு மக்களவை தொகுதியில் நடிகையும், தேசிய செயற்குழு உறுப்பினருமான குஷ்புவை பாஜக நிறுத்த வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கேரள மாநிலத்தில் உள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 26-ந்தேதி நடைபெற்றது. இதில் 18 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி கட்சிகளும், பாரதிய ஜனதா மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகள் தலா ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றன. வயநாடு தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால் அவர் ரேபரேலி தொகுதியிலும் வெற்றி பெற்றிருந்ததை தொடர்ந்து, அவர் ரேபரேலி தொகுதி எம்.பி.யாகவே பதவியேற்றார். இதனால் வயநாடு மக்களவை தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
அதேபோன்று செலக்கரா தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ராதாகிருஷ்ணன் ஆலத்தூர் மக்களவை தொகுதியிலும், பாலக்காடு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஷாபி பரம்பில் வடகரா மக்களை தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். அவர்கள் இருவரும் எம்.பி.க்களாக பதவியேற்றனர். இதனால் செலக்கரா மற்றும் பாலக்காடு சட்டமன்ற தொகுதிகளும் காலியானதாக அறிவிக்கப்பட்டன. இதனால் கேரளாவில் வயநாடு மக்களவை தொகுதி, செலக்கரா மற்றும் பாலக்காடு சட்டமன்ற தொகுதிகள் காலியாக இருந்தன.
வயநாடு மக்களவை தொகுதி மற்றும் செலக்கரா-பாலக்காடு சட்டமன்ற தொகுதிகள் ஆகிய 3 தொகுதிகளுக்கும் வருகிற நவம்பர் 13-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதையடுத்து, கேரள மாநிலத்தில் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தன. இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று (18-ந்தேதி) தொடங்குகிறது.
வயநாடு மக்களவை தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்று காங்கிரஸ் கட்சி ஏற்கனவே அறிவித்து விட்டது. இந்தநிலையில், நடிகையும், தேசிய செயற்குழு உறுப்பினருமான குஷ்புவை பாஜக நிறுத்த வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தேசிய தலைமை பரிசீலிக்கும் இறுதி வாய்ப்பு பட்டியலில் தென்னிந்திய நடிகையின் பெயர் இடம் பெற்றுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குஷ்புவின் வேட்புமனு குறித்து தேசிய தலைமை மாநில தலைமையிடம் கருத்து கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எனினும், மாநில தலைமையின் கருத்தை மதிப்பிட்ட பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார் குஷ்பு. தற்போதைய நிலவரப்படி, அவர் பாஜகவின் தமிழ்நாடு பிரிவில் ஒரு பகுதியாக உள்ளார். எம்டி ரமேஷ், சோபா சுரேந்திரன், கே சுரேந்திரன் மற்றும் நவ்யா ஹரிதாஸ் உள்ளிட்ட பிற பெயர்கள் வேட்பாளராக பரிசீலிக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
Readmore: அலட்சியம் வேண்டாம்!. தொண்டையில் அடிக்கடி சளி சேருகிறதா?. புற்றுநோயாக இருக்கலாம்!.