இந்தியாவுக்கு எச்சரிக்கை!… அதிகரிக்கும் மக்கள் தொகை!… இருப்பிட வசதியே இருக்காது!… திடுக்கிடும் ஆய்வு!
மக்கள் தொகை அதிகரிப்பால் இந்தியாவில் வரும் 2036ஆம் ஆண்டுக்குள் 6.4 கோடி வீடுகள் கூடுதலாகத் தேவைப்படும் என்றும் மக்கள் தொகை பெருக்கத்தை சமாளிக்கும் அளவுக்கு போதிய வீடுகள் இருக்காது என்றும் ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் 2011ஆம் ஆண்டு முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. இருப்பினும், சில புள்ளிவிவரங்களின்படி இந்தியாவின் மக்கள் தொகை சுமார் 140.76 கோடியாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்தநிலையில், வாரணாசியில் நடைபெற்ற நியூ இந்தியா உச்சி மாநாட்டில் தரவு பகுப்பாய்வு நிறுவனமான லிசிஸ் ஃபோராஸ் உடன் இணைந்து கிரடாய் நிறுவனம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதன்படி, 2018ஆம் ஆண்டில் இந்தியாவில் 2.9 கோடி வீடுகள்பற்றாக்குறையாக இருந்தது. எனவே, 2036ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் மொத்த வீடுகளுக்கான தேவை 9.3 கோடியாக இருக்கும் என்று கிரடாய்-லிசி ஃபோராஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரியல் எஸ்டேட் வளர்ச்சிக்கான தேவை நடுத்தர மற்றும் சிறிய நகரப் பகுதிகளில் இருக்கும் என்று இந்த அறிக்கையில் குறிப்பிடப்படுள்ளது. வேகமாக வளர்ந்து வரும் இந்திய மக்கள் தொகை காரணமாக வீடுகளின் தேவை மற்றும் விநியோகம் அதிகரித்துள்ளது என்று கிரடாய் தலைவர் போமன் இரானி கூறியுள்ளார்.
வீடு வாங்குபவர்களின் வாங்கும் சக்தி தற்போது மேம்பட்டுள்ளது. மேலும் அவர்கள் பெரிய வீடுகளை வாங்கத் தயாராக உள்ளனர். அனைத்து ரியல் எஸ்டேட் பங்குதாரர்களுக்கும் 2023ஆம் ஆண்டு ஒரு குறிப்பிடத்தக்க ஆண்டாக இருந்தது. இந்த நிலை 2024 மற்றும் அதற்குப் பிறகும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடுத்தர மற்றும் சிறிய நகரங்களில் வீடு கட்டும் பணிகள் துரிதப்படுத்தப்படும் என்றும் இந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த மக்கள் தொகை பெருக்கத்தை சமாளிக்கும் அளவுக்கு போதிய வீடுகள் இருக்காது என்று இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.