நாளை சித்திரா பௌர்ணமி..! எந்த கடவுளை வழிபட்டால் நன்மை உண்டாகும்..! சித்ரகுப்தர் வழிபாடு சிறப்பு என்ன..!
திருச்சி மலைக்கோட்டை கோயிலில் ராசராச சோழனின் பத்தாம் ஆண்டுக் கல்வெட்டில் சித்ரா பௌர்ணமிக்கு நிவந்தம் கொடுத்த குறிப்பு உள்ளது. இதன் மூலம் தமிழர்கள் தொன்றுதொட்டு சித்ரா பௌர்ணமி வழிபாட்டை செய்கிறார்கள்.
பௌர்ணமி என்றால் முழுமை என்று பொருள் .அதுவும் தமிழ் வருடத்தில் முதல் மாதமான சித்திரை மாதமும், சித்திரை நட்சத்திரமும், பௌர்ணமி திதியும் ஒன்றினையும் நாளே சித்ரா பௌர்ணமி ஆகும். இது சித்திரப்பூர்ணிமா என்றும் அழைக்கப்படுகிறது. சூரியனின் மறைவும் சந்திரனின் உதயமும் இன்றைய தினத்தில் ஒரே நேரத்தில் நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அழகைக் காண ஏராளமான மக்கள் கன்னியாகுமரி கடற்கரைக்கு செல்வது வழக்கம். சித்ரா பௌர்ணமி நாளை, ஏப்ரல் 23, 2024- சித்திரை பத்தாம் நாள் வர இருக்கிறது.
இந்நாளில் நம் வழிபாடுகளை செய்வதால் மன கவலை நீங்கி, மன ஆரோக்கியம் பெருகும், குடும்ப ஒற்றுமை நிலைக்கும், செல்வம் விருத்தியாகும். சந்திரனுக்கும் நம் மனதிற்கும் நிறைய தொடர்புண்டு இதனால் இந்த நாளில் தியானம் மேற்கொள்வதால் உடலில் உள்ள கிரீட சக்கரம் மற்றும் இதய சக்கரத்திற்கு இடையே தொடர்பை ஏற்படுத்தும்.
சித்ரா பௌர்ணமியின் விசேஷங்களில் ஒன்று சித்ரகுப்த வழிபாடு. பூலோகத்தில் மனிதர்கள் செய்யும் பாவ, புண்ணியக் கணக்குகளை எல்லாம் எழுதுபவர் சித்ரகுப்தர். பார்வதி தேவி வரைந்த சித்திரத்திலிருந்து பிறந்தவர் என்பதால் அவருக்குச் சித்திர குப்தர் என்ற பெயர் ஏற்பட்டது. இந்த நாளில் சித்ர குப்தரை வழிபாடு செய்து வணங்கினால் அவர் நமக்கு எளிய முறையில் சிவனருளை அடைய வகை செய்வார் என்பது நம்பிக்கை. இந்த நாளில் செய்யும் தானம் சிறிதளவாக இருந்தாலும் அதன் பலன் மலையளவாகத் திரும்பக் கிடைக்கும் என்பது நம்பிக்கை. எனவே தவறாமல் தானம் செய்து வழிபாடு செய்ய வேண்டிய நாள்.
கிரிவலம் செய்ய உகந்த நாளாகும். சிவபெருமானை வழிபாடு செய்து இந்நாளில் கிரிவலம் செல்லலாம். மேலும் மலை மேல் இருக்கும் இறைவனை கிரிவலம் செய்வது மிகச் சிறப்பாகும். அது மட்டுமல்லாமல் குலதெய்வ வழிபாடு, அம்மன் வழிபாடு செய்யவும் உகந்த நாள். கடற்கரை, ஆற்றங்கரையில் உள்ள இறைவனை வழிபாடு செய்து அன்று இரவு சந்திர ஒளி நம் மீது படும் படிஇருக்கவும். தியானம் மேற்கொள்வது சிறப்பாகும்.
சித்ரா பௌர்ணமியி தினத்தில்தான் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபோகம் நடைபெறும். இந்திரன் தீர்த்த யாத்திரை மேற்கொண்டு சிவ பூஜை செய்த தளமாக மதுரை கூறப்படுகிறது. அதுவும் சித்திரை பௌர்ணமி அன்று அவர் இந்திர பூஜை செய்ததாக கூறப்படுவதால் இன்றும் சித்ரா பௌர்ணமி அன்று இந்திர பூஜை விழா மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெறுகிறது. இதை காண இந்திரன் வருவார் எனவும் நம்பப்படுகிறது. ஆகவே மனோகாரரான சந்திரன் வலுப்பெற்ற தினமாக இந்நாளில் நாம் வழிபாடு செய்தோமேயானால் நம் மனக் கவலை,மனக்குழப்பங்கள் நீங்கும் .