காரில் உலகம் சுற்ற விரும்புகிறீர்களா.? உங்கள் கைகளில் இருக்க வேண்டிய ஆவணங்கள் என்ன.?
பொதுவாக வெளிநாட்டு பயணங்கள் என்றாலே விமானம் அல்லது கப்பல் போக்குவரத்தில் தான் இருக்கும். சில நேரங்களில் நமது நாட்டின் எல்லைக்கு மிக அருகில் இருக்கும் நாடுகளுக்கு பேருந்து மூலமும் ரயில் மூலமும் செல்லலாம். ஆனால் தற்போது பல்வேறு சுற்றுலா பயணிகள் தங்களது சொந்த வாகனத்தில் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று அந்த பகுதிகளை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். ஒருவர் தனது சொந்த வாகனத்தில் வெளிநாடு செல்ல எந்த ஆவணங்கள் தேவை என்று பார்ப்போம்.
மனிதர்கள் மற்ற நாட்டிற்கு பயணம் செல்வதற்கு பாஸ்போர்ட் தேவைப்படுவது போல வாகனங்களை ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு கொண்டு செல்வதற்கு கார்னெட்டி டி பேசேஜ் என்று ஆவணம் அவசியம். இது சுங்க வரியில்லாமல் ஒரு பொருளையோ அல்லது சொத்தையோ ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு கொண்டு செல்வதற்கு உதவும் ஆவணமாகும். மேலும் இந்த ஆவணத்தை பயன்படுத்தி கொண்டு சென்ற பொருள் அல்லது சொத்தை குறிப்பிட்ட காலத்திற்குள் அந்த நாட்டில் இருந்து வெளியேற்ற வேண்டும். இல்லையென்றால் மிகப்பெரிய தொகையை அபராதமாக செலுத்த வேண்டி வரும்.
ஒரு வெளிநாட்டிற்கு காரில் பயணம் மேற்கொள்ளும் போது அந்த நாட்டின் மோட்டார் கிளப்பை தொடர்பு கொண்டு அவர்களது இணையதளத்தில் நமது தகவல்கள் அனைத்தையும் பதிவேற்றி முறையாக அனுமதி பெற வேண்டும். மேலும் பாஸ்போர்ட்டில் 20 பக்கங்கள் அதிகமாக இருக்க வேண்டும். நாம் எந்தெந்த நாடுகள் வழியாக செல்கிறோமோ அந்த நாடுகளில் உள்ள விசா ஸ்டாம்பிங் செய்வதற்கு இது உதவும்.
மேலும் ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு காரில் பயணம் செய்யும்போது அந்தக் காரின் தற்போதைய மதிப்பிற்கு 200% வைப்புத் தொகையை வங்கி வரை ஓலையாகவோ அல்லது காசோலையாகவோ வைத்திருக்க வேண்டும். மேலும் அந்த ஆவணம் வங்கி உத்திரவாதமாக கூட இருக்கலாம். மேலும் நாம் பயணம் செய்யும் நாடுகளில் நாம் பெற்றிருக்கும் ஓட்டுனர் குடும்பத்திற்கு அனுமதி இருக்கிறதா என்பதையும் சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.