“ஃப்ரிட்ஜில் வைத்தது போல் ஃப்ரெஷ்ஷாக இருக்கிறார்” பிரபல நடிகை குறித்து, மேடையில் விஷால் பேசிய பேச்சு..
தமிழ் சினிமாவில் ஒரு படம் கிடப்பில் இருந்து 5,6 வருடம் தள்ளி வந்ததை பார்த்திருப்போம், ஆனால், விஷால் நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் 13 வருடம் கிடப்பில் இருந்து வந்த படம் தான், மதகஜராஜா. 13 வருடங்கள் கழித்து ரிலீஸானாலும், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் படம் சக்கைப்போடு போட்டுவருகிறது என்றே சொல்லலாம். இதனால் ஒட்டு மொத்த படக்குழுவினரும் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் உள்ளனர். இதையடுத்து, நன்றி தெரிவிக்கும் விழா, நேற்று சென்னையில் நடைபெற்றுள்ளது.
மாபெரும் வெற்றி பெற்றுள்ள இந்த படத்தில், விஷாலுடன் சேர்ந்து, அஞ்சலி, வரலட்சுமி, சந்தானம், மனோபாலா, மணிவண்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தப் படத்துக்கு விஜய் ஆண்டனி இசையமைத்திருந்தார். 13 வருடங்களுக்கு முன்பு இந்த படத்தை எடுத்த நிலையில், பலருக்கு இந்தப் படம் மறந்தே போய்விட்டது. இந்நிலையில், இந்தப் பொங்கலையொட்டி படமானது ரிலீஸானது. அதுவும் படக்குழுவினர் எதிர்பார்த்தபடியே படம் மெகா ஹிட்டானது.
ஒரு படத்திற்கு தேவையான, ஆக்ஷன், கிளாமர், சென்ட்டிமென்ட், காதல், காமெடி என அனைத்துமே சரியாக இருந்தது. இந்நிலையில், மதகஜராஜா மெகா ஹிட்டானதை அடுத்து நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைப்பெற்றது. அப்போது பேசிய நடிகர் விஷால், "வரலட்சுமி இத்தனை வருடங்களில் எனக்கு கிடைத்த அன்பான தோழி. ஃப்ரிட்ஜில் வைத்தது போல் அப்படியே ஃப்ரெஷ்ஷாக இருக்கிறார். ஒரே ஒரு படம் தான் சேர்ந்து பணியாற்றியிருக்கிறோம், ஆனால் கல்லூரியில் ஒன்றாக படித்த நண்பர்கள் போல் நாங்கள் பழகுவோம்.
பொதுவாக நான் எந்த பிரச்சனை வந்தாலும் அழ மாட்டேன், கண்ணாடியின் முன் நின்று, ''எதையும் கடந்து சென்று விடலாம்'' என்று எனக்கு நானே பேசி தைரியம் ஊட்டிக்கொள்வேன். ஆனால் ஹனுமன் படத்தில் வரலட்சுமி நடித்த ஒரு காட்சிக்கு, திரையரங்குகளில் ரசிகர்களின் கைத்தட்டலை பார்த்து முதன்முறையாக நான் கண் கலங்கினேன் " என்றார்.