“சூர்யா அப்படி பண்ணிருக்க கூடாது.. எவ்வளவோ கேட்டேன்.. ஆனா...” கௌதம் மேனன் ஓபன் டாக்...
கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான படம் துருவ நட்சத்திரம். இந்த படத்தை கௌதம் மேனன் தான் தயாரித்துள்ளார். ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், சிம்ரன், பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த படம் 2018-ம் ஆண்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. எனினும் நிதி பிரச்சனை காரணமாக இந்த படம் வெளியாவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வந்தது. இந்த படம் கடந்த ஆண்டு திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், சில காரணங்கள் அப்போதும் படம் வெளியாகவில்லை.
முதலில் இந்த படத்தை சூர்யாவை வைத்து இயக்கப் போவதாக கௌதம் மேனன் 2013-ம் ஆண்டு அறிவித்திருந்தார். எனினும் சூர்யா உடன் கருத்து வேறுபாடு காரணமாக இந்த படம் கைவிடப்பட்டது. அதன்பின்னரே இந்த படத்தை விக்ரமை வைத்து இயக்க உள்ளதாக கௌதம் மேனன் அறிவித்திருந்தார். படத்தின் ரிலீஸில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருவதால் படம் எப்போது வெளியாகும் என்பதே கேள்விக்குறியாகி உள்ளது.
இந்த நிலையில் நடிகர் சூர்யா இந்த படத்தில் நடிக்காதது குறித்து கௌதம் மேனன் மனம் திறந்து பேசி உள்ளார். பிரபல யூ டியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர் “ சூர்யா துருவ நட்சத்திரம் படத்தில் நடிக்க யோசித்திருக்கவே கூடாது. ஏனெனில் காக்க காக்க, வாரணம் ஆயிரம் இரண்டு படங்களுமே மிகப்பெரிய ஹிட்டானது. அதே போல் துருவ நட்சத்திரம் படத்திற்கு நாங்கள் திட்டமிட்டோம். கதை உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து நாங்கள் நிறைய பேசினோம். ஆனால் துருவ நட்சத்திரம் படத்தில் நடிக்க சூர்யா ஒப்புக்கொள்ளவில்லை.
படத்திற்கு என்ன ரெஃபரன்ஸ் இருக்கு என்று கேட்டார். என்னிடம் ஐடியா உள்ளது. நீங்கள் நடித்தால் வேற மாதிரி ஒரு படத்தை உருவாக்குவேன் என்று சொன்னேன். அதன்பின்னரே படத்தின் வேலைகளை தொடங்கினோம். ஆனால் ஏதோ ஒரு இடத்தில் சூர்யா இந்த படத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. என்னை அவர் நம்பவில்லை. எனக்கு உதவி செய்ய வேண்டும் என்று கூட நான் கேட்கவில்லை. நம்பிக்கை வைக்க சொன்னேன்.
படத்தில் என்ன தப்பா போகும், உங்களுக்கு அடுத்த படம் வராமல் போகுமா... நான் தானே தயாரிப்பாளர், எனக்கு தான் பிரச்சனை என்று எவ்வளவோ கேட்டேன். ஆனால் அவர் ஒப்புக்கொள்ளவே இல்லை. துருவ நட்சத்திரம் கண்டிப்பாக ஒரு நாள் ரிலீஸ் ஆகும். அப்போது வரவேற்பு கிடைக்கும் என்று நம்புகிறேன்.” என்று தெரிவித்தார்.