த.வெ.க மாநாட்டுக்கு அடுத்த சிக்கல்...! காவல்துறை புதிய உத்தரவு... அதிர்ச்சியில் தொண்டர்கள்
த.வெ.க மாநாட்டுக்கு கூடுதலாக 75 ஏக்கர் நிலம் ஏற்பாடு செய்ய விழுப்புரம் காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
நடிகரும், த.வெ.க தலைவருமான விஜய் தலைமையில் அக்கட்சியின் முதல் மாநில மாநாடு அக்டோபர் 27-ல் விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. 2026 தமிழக சட்டப்பேரவை தேர்தலை இலக்கு வைத்து நடக்கும் இந்த மாநாடு பிற அரசியல் கட்சியினரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்நிலையில் தவெக மாநாடுக்கு தொண்டர்கள், பொது மக்களை வரவேற்று வித்தியாசமான அழைப்பிதழ்களை துண்டு பிரசுரமாக அக்கட்சியினர் வழங்குகின்றனர்.
மாநாடு குழு
முழு மாநாட்டு ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக புஸ்ஸி ஆனந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுதவிர பொருளாதாரக் குழு, சட்ட நிபுணர் குழு, வரவேற்புக் குழு, நிகழ்ச்சி ஒருங்கிணைப்புக் குழு, சுகாதாரக் குழு, போக்குவரத்து ஒருங்கிணைப்புக் குழு, வாகன நிறுத்தக் குழு ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. சமூக ஊடகக் குழு, பேச்சாளர்கள் மற்றும் பயிற்சிக் குழு, விளம்பரக் குழு மற்றும் துப்புரவு குழு, நிலம் ஒப்படைப்புக் குழு ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுக்களில் மட்டும் தவெகவைச் சேர்ந்த 200-க்கும் அதிகமான நிர்வாகிகள் இடம் பெற்றுள்ளனர்.
த.வெ.க மாநாட்டுக்கான பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. மாநாட்டுக்கான பூமி பூஜை மற்றும் பந்தக்கால் நடும் விழா கடந்த 4 ஆம் தேதி நடைபெற்றது. நேற்று சனிக்கிழமை முதல் மாநாடு நடைபெறும் இடத்தில் 100 அடி உயர கொடிக்கம்பம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், த.வெ.க மாநாட்டுக்கு கூடுதலாக 75 ஏக்கர் நிலம் ஏற்பாடு செய்ய விழுப்புரம் காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
காவல்துறை உத்தரவு
மாநாட்டிற்கான வாகனங்கள் நிறுத்தும் இடத்தை விழுப்புரம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரவீந்திர குமார் குப்தா ஆய்வு செய்துள்ளார். த.வெ.க மாநாட்டுக்கு 15 லட்சத்திற்கு மேற்பட்டோர் வருகை தர இருப்பதால் கூடுதல் இடங்களை ஏற்பாடு செய்ய அறியுறுத்தியுள்ளார். த.வெ.க மாநாட்டிற்காக தற்போது 45 ஏக்கர் நிலம் வசப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 75 ஏக்கர் நிலத்தை ஏற்பாடு செய்யுமாறு அவர் உத்தரவிட்டுள்ளார். காவல்துறையின் இந்த புதிய உத்தரவாள் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் மாநாடு திட்டமிட்டபடி நடக்குமா என்ற கேள்வி தற்பொழுது எழுந்துள்ளது.