விஜய்யின் அடுத்த மூவ்..!! டிசம்பர் 27 முதல் அனல் பறக்கும் அரசியல் களம்..!! பக்கா பிளானுடன் களமிறங்கும் தவெக..!!
தமிழ்நாடு முழுவதும் கட்சிக்கு புதிய நிர்வாகிகளை நியமிக்க முடிவு செய்துள்ள விஜய், டிசம்பர் 27ஆம் தேதி முதல், மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு கடந்த மாதம் 27ஆம் தேதி நடைபெற்றது. இந்த மாநாட்டில் விஜய்யின் பரபரப்பான பேச்சு தமிழக அரசியலை புரட்டிப் போட்டது. மாநாட்டை தொடர்ந்து 2026 தேர்தலை எதிர்கொள்ள தவெக தயாராகி வருகிறது. அதற்கேற்ப அரசியல் வியூகங்களை விஜய் அமைத்து வருகிறார்.
கூட்டணி ஆட்சி, அதிகாரப்பகிர்வு என்ற அடிப்படையில் தேர்தல் அரசியலை முன்னெடுத்துள்ள விஜய், கூட்டணிக்கான வாசலை திறந்து வைத்துள்ளார். திமுக, அதிமுக, பாஜக கூட்டணிகளில் உள்ள கட்சிகளை இழுக்கவும், எந்த கூட்டணியிலும் இல்லாத கட்சிகளை வரவழைக்கவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மற்றொரு பக்கம் தமிழக வெற்றிக்கழகத்தை அனைத்து நிலைகளிலும் பலப்படுத்தும் பணியையும் அவர் தொடங்கி உள்ளார்.
விரைவில் தமிழகம் முழுவதும் கட்சிக்கு புதிய நிர்வாகிகளை நியமிக்க விஜய் முடிவு செய்துள்ளார். ஏற்கனவே மாநாட்டு பணிக்காக பல்வேறு அணிகளை விஜய் அமைத்திருந்தார். அந்த அணிகளில் இடம் பெற்று, சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்பட உள்ளது. அதன்படி மாவட்ட, வட்ட, ஒன்றிய, கிளை வரை செயலாளர்கள் நியமிக்கப்பட இருக்கின்றனர். தேர்தல் பணிக்காக இப்போதே ஒரு வாக்குச்சாவடிக்கு 10 பொறுப்பாளர்கள் வீதம் நியமித்து பணிகளை தொடங்கவும் விஜய் திட்டமிட்டுள்ளார்.
இந்நிலையில் தான், டிசம்பர் 27ஆம் தேதி முதல் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் செய்ய விஜய் திட்டமிட்டுள்ளார். இதற்கான பயண விவர தயாரிப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. கோவையில் இருந்து சுற்றுப்பயணத்தை தொடங்கி, நெல்லையில் முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எந்த மாவட்டத்திற்கு விஜய் செல்கிறாரோ, அந்த மாவட்டத்தில் தங்கியிருந்து நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்துகிறார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.