ஜல்லிக்கட்டில் வெற்றி பெற்ற விஜயபாஸ்கரின் கொம்பன் காளை..!! பரிசு வழங்கிய அமைச்சர் அன்பில் மகேஷ்..!!
தமிழர் திருநாளான தை பொங்கலை முன்னிட்டு உலகப் புகழ்பெற்ற மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுகளை தொடர்ந்து, திருச்சி பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டு பிரசித்தி பெற்றது. அந்த வகையில், திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே பெரிய சூரியூரில், நற்கடல்குடி கருப்பண்ணசாமி கோயிலில் ஆண்டுதோறும் பொங்கல் வைத்து ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படும்.
அந்த வகையில், பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று துவங்கியது. 8 சுற்றுகளாக நடைபெறும் இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 800 காளைகள் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 800 காளைகளை அடக்க 500 காளையர்கள் களத்தில் விளையாடி வருகின்றனர்.
காளைகளை அடக்கும் சிறந்த மாடுபிடி வீரருக்கு முதல் பரிசாக இருசக்கர வாகனம் (பைக்) ஒன்றும், 2-வது பரிசாக எல்சிடி டிவியும் வழங்கப்பட உள்ளது. இது தவிர காளைகள், காளையருக்கு எவர்சில்வர் பாத்திரங்கள், பீரோ, கட்டில், மேஜை, மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்ட ஏராளமான பரிசுப் பொருட்கள் வழங்கப்பட உள்ளன. இந்நிலையில், இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் கொம்பன் காளை வெற்றி பெற்றது.
இதையடுத்து, விஜயபாஸ்கரிடம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பரிசு வழங்கினார். முன்னதாக, ஜல்லிக்கட்டு போட்டியின் போது, அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அமைச்சரும், திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி இருவரும் ஒரே மேடையில் அருகருகே அமர்ந்து பரஸ்பரம் நலம் விசாரித்துக்கொண்டு ஜல்லிக்கட்டு போட்டிகளை ஆரவாரத்துடன் கண்டு ரசித்தனர்.