பிப்.4ஆம் தேதி விஜய் மக்கள் இயக்கத்தை கட்சியாக பதிவு செய்கிறார் விஜய்..? நாடாளுமன்ற தேர்தலில் போட்டி..?
விஜய் மக்கள் இயக்கத்தை கட்சியாக பதிவு செய்ய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திர அந்தஸ்தைப் பெற்றுள்ள நடிகர் விஜய், மக்கள் இயக்கத்தை தொடங்கி பல நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகிறார். குறிப்பாக கடந்தாண்டில் பல நலத்திட்டங்களை செய்தார். பள்ளி மாணவர்களிடத்தில் புத்தக வாசிப்பு திறன் மற்றும் பொதுஅறிவு சிந்தனையை வளர்க்கும் நோக்கில் 'தளபதி விஜய் நூலகம்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் 21 இடங்களில் துவங்கப்பட்டது. முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் பிறந்தநாளையொட்டி, விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பல இடங்களில் 'தளபதி விஜய் பயிலகம்' தொடங்கப்பட்டது.
தொடர்ந்து கல்வி விருது வழங்கும் விழா, மருத்துவ முகாம், புயல் நிவாரணம் போன்றவற்றை செய்துள்ளார். விஜயின் கவனம் அரசியலை நோக்கி திரும்பியுள்ளது என்று கடந்த சில ஆண்டுகளாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், விஜய் மக்கள் இயக்கத்தை கட்சியாக மாற்ற நடிகர் விஜய் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கட்சி விரைவில் தொடங்கப்படும் என விஜய் தெரிவித்ததாக தகவல் வெளியான நிலையில், பிப்ரவரி 4ஆம் தேதி விஜய் மக்கள் இயக்கத்தின் முக்கிய நிர்வாகிகள், டெல்லி சென்று கட்சியை பதிவு செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், விஜய் தொடங்கும் அரசியல் கட்சி, வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.