மருத்துவமனையில் இருந்து எல்.கே. அத்வானி டிஸ்சார்ஜ்! உடல் நலம் சீராக இருப்பதாக தகவல்!!
நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூத்த பாஜக தலைவர் லால் கிருஷ்ண அத்வானி இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக மருத்துவமனை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
96 வயதான எல்.கே. அத்வானிக்கு வயது மூப்பு காரணமாக நள்ளிரவில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ மனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், அவரது உடல்நலம் சீரானதால் தற்போது மருத்துவ மனையில் இருந்து டிஸ்ஜார்ச் செய்யப்பட்டுள்ளார்.
எல்.கே.அத்வானி யார்?
நவம்பர் 8, 1927ல் பாகிஸ்தான் கராச்சியில் பிறந்த அத்வானி, 1942 இல் ஸ்வயம்சேவகராக ஆர்எஸ்எஸ்ஸில் சேர்ந்தார். 1986 முதல் 1990 வரை பாஜக தேசியத் தலைவராகவும், பின்னர் 1993 முதல் 1998 வரையிலும், 2004 முதல் 2005 வரையிலும் பணியாற்றினார். 1980 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து மிக நீண்ட காலம் கட்சியின் தலைவராக பணியாற்றினார்.
ஏறக்குறைய மூன்று தசாப்தங்களாக பாராளுமன்ற வாழ்க்கையை முடித்துக்கொண்டு, எல்.கே. அத்வானி முதலில் உள்துறை அமைச்சராகவும், பின்னர், அடல் பிஹாரி வாஜ்பாய் (1999-2004) அமைச்சரவையில் துணைப் பிரதமராகவும் இருந்தார். 10 டிசம்பர் 2007 அன்று, பிஜேபியின் நாடாளுமன்ற வாரியம் 2009 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தல்களில் அத்வானியை பிரதமர் வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஆனால் 2009 பொதுத் தேர்தலில் காங்கிரஸும் அதன் கூட்டணிக் கட்சிகளும் வெற்றி பெற்றபோது,அத்வானி, சுஷ்மா ஸ்வராஜ் 15வது மக்களவையில் எதிர்க்கட்சி தலைவராக வருவதற்கு வழி வகுத்தார்.