விவசாயிகளுக்கு செம குட் நியூஸ்..!! 50% மானியத்தில் மின் மோட்டார்கள்..!! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..?
விவசாயத்திற்கு மோட்டார்கள் தேவைப்படும் விவசாயிகள் மானியத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தருமபுரி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”விவசாயத்தில் நிலவும் வேலையாட்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவும் விவசாயிகள் காலத்தே சாகுப்படிப் பணிகளை மேற்கொண்டு பயிர் உற்பத்தித் திறனை உயர்த்தவும் பல்வேறு வகையான வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது.
நடப்பு (2024-2025) நிதியாண்டில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் மானியத்தில் வழங்கும் திட்டத்தில், தருமபுரி மாவட்டத்திற்கு ரூ.13.09 லட்சம் மதிப்பிலான 187 மின் மோட்டார்கள் மானியத்தில் வழங்குவதற்காக ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. எனவே, மோட்டார்கள் தேவைப்படும் விவசாயிகளில் சிறு, குறு ஆதிதிராவிடர்/ பழங்குடியினர், பெண் விவசாயிகளுக்கு 50% மானியம் அல்லது அதிகபட்ச மானியத் தொகையாக ரூ.7,000 மற்றும் இதர விவசாயிகளுக்கு 40% மானியம் அல்லது அதிகபட்ச மானியத் தொகையாக ரூ.4,000 வழங்கப்படுகிறது.
ஆகையால், விருப்பமுள்ள விவசாயிகள், உதவி செயற்பொறியாளர்(வே.பொ) வேளாண்மைப் பொறியியல் துறை, மாவட்ட ஆட்சியர் வளாகம், தருமபுரி (தொலைப்பேசி: 04342 296132) மற்றும் உதவி செயற்பொறியாளா (வே.பொ), வேளாண்மைப் பொறியியல் துறை, ஒழுங்கு முறை விற்பனை கூட வளாகம், திருப்பத்தூர் மெயின் ரோடு, அரூர், தருமபுரி (தொலைப்பேசி: 04346296077) ஆகிய அலுவலகங்களை தொடர்பு கொண்டு உரிய வழிமுறைகளின்படி, மானியத்தில் வாங்கிக் கொள்ளலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.