அண்ணன் மாதிரியே இருந்த தம்பி; 20 வருடங்களாக ஏமாந்த மனைவி... போலீசையே திணற வைத்த குடும்பம்..
சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்தவர்கள் 59 வயதான பழனி மற்றும் 62 வயதான பன்னீர்செல்வம். உடன்பிறந்த சகோதரர்களான இவர்கள், பார்ப்பதற்கு ஒரே மாதிரி இருந்துள்ளனர். இருவரில் யார் அண்ணன், யார் தம்பி என்று அடையாளம் கண்டுபிடிக்கவே முடியாத அளவிற்கு இருவரும் ஒரே மாதிரி இருந்துள்ளனர். இத்தனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட பழனி, தனது அண்ணனின் சான்றிதழ்களை பயன்படுத்தி வேலை செய்து வந்துள்ளார். பழனிக்கு சரியாக படிப்பு வராததால், அவர் படிக்கவில்லை. இதனால் அனைவரும் பழனியை, பன்னீர்செல்வம் என்றே நினைத்துள்ளனர். அது மட்டும் இல்லாமல், பழனி, தனது அண்ணனின் பெயரிலேயே லூர்து மேரி என்ற பெண்ணை காதலித்து, 2002ம் ஆண்டு அவருடன் சேர்ந்து வாழ தொடங்கியுள்ளார். அவரது மனைவி, சர்ட்டிபிகேட்டில் பன்னீர்செல்வம் என்ற பெயர் ஏன் உள்ளது என்று கேள்வி எழுப்பி உள்ளார். அதற்க்கு அவர் சர்ட்டிபிகேட்டில் பன்னீர்செல்வம் என்ற பெயர் உள்ளது, ஆனால் குடும்பத்தினர் செல்லமாக தன்னை பழனி என்று கூப்பிடுவார்கள் என்று கூறியுள்ளார்.
இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில், இவர் தனது மனைவியை தினமும் அடித்து துன்புறுத்தியுள்ளார். ஒரு கட்டத்தில் அவரது கொடுமைகளை பொறுத்துக்கொள்ள முடியாத மனைவி, தனது கணவர் தன்னை கொலை செய்ய முயற்சிப்பதாக, கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் பன்னீர்செல்வத்தின் மீது புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில், போலீசாரும், பன்னீர்செல்வத்தின் பெயரில் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில், கடந்த 2018ம் ஆண்டு முதல், இது தொடர்பான வழக்கு மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. ஒவ்வொரு முறையும், பன்னீர்செல்வத்தின் பெயரில் பழனி ஆஜராகி வந்தார்.
இதையடுத்து, அவருக்கு 3 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, கோடம்பாக்கம் போலீசார், நிஜமான பன்னீர்செல்வத்தை சுற்றி வளைத்து கைது செய்ய முயன்றனர். இதனால் பதறிப்போன நிஜ பன்னீர்செல்வம், என்னை எதுக்காக கைது செய்கிறீர்கள்? என்று கேட்டுள்ளார். அதற்கு போலீசார் "உனது மனைவி தந்த புகாரின் அடிப்படையில் தான் உன்னை கைது செய்கிறோம் என்றனர்". இதனால் அதிர்ச்சி அடைந்த நிஜ பன்னீர்செல்வம், அது நானில்லை எனது தம்பி பழனி என்று கூறியுள்ளார். இதனால் குழம்பிப்போன போலீசார், அவரது மனைவியை நேரடியாக அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது, நிஜ பன்னீர்செல்வத்தை பார்த்த லூர்து மேரி, இவர் தன்னுடைய கணவர் இல்லை என்று கூறியுள்ளார்.
இதனால், பன்னீர்செல்வம் யார்? பழனி யார்? என்ற விசாரணையை போலீசார் மேற்கொண்டனர். இறுதியில் தான், பன்னீர்செல்வத்தின் தம்பி பழனி, 20 வருடங்களாகவே தனது அண்ணனின் சான்றிதழ்களை பயன்படுத்தி வழக்கறிஞர் ஒருவரிடம் உதவியாளராக வேலை செய்ததும், அண்ணன் பெயரை பயன்படுத்தியே, லூர்து மேரியை காதலித்து திருமணம் செய்ததும், அண்ணன் பெயரை பயன்படுத்தியே போலீசாரையும், கோர்ட்டையும் ஏமாற்றியதும் தெரியவந்துள்ளது. தண்டனை உறுதியானதால், பழனி தலைமறைவாகிவிட்டார். 5 மாத தேடலுக்கு பிறகு, மடிப்பாக்கத்தில் பதுங்கியிருந்த பழனியை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், போலீசார் பழனியை தேடி வந்த 5 மாதங்களாக, கீழ்க்கட்டளை பகுதியில் உள்ள அப்பார்ட்மென்ட் ஒன்றில், செக்யூரிட்டியாக அவர் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது, வேறொரு பெண்ணை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்துள்ளார். ஆரம்பத்திலிருந்தே மொத்த தவறுகளையும் செய்து வந்த பழனி, அப்பாவி லூர்துமேரியின் நடத்தையின் மீது சந்தேகப்பட்டு தான் அவரை அடித்து உதைத்து சித்ரவதை செய்துள்ளார். மேலும், கடந்த 2002-ல் பன்னீர்செல்வம் என்ற பெயரில் லூர்து மேரியை காதலித்த பழனி, முறைப்படி அவரை திருமணம் செய்யாமல், இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர்.