உயர்நீதிமன்ற நீதிபதி நியமனத்தில் வன்னியர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வேண்டும்...! ராமதாஸ் கோரிக்கை
உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் வன்னியர்கள் உள்ளிட்ட சமூகங்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் வன்னியர்கள் உள்ளிட்ட பின்தங்கிய, மிகவும் பின்தங்கிய சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருவது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. அனைத்துத் துறைகளிலும் பின்தங்கிய சமூகங்களை முன்னுக்குக் கொண்டு வருவது தான் சமூகநீதி எனும் நிலையில், அந்த வாய்ப்பு மறுக்கப்படுவது பெரும் சமூக அநீதியாகும். சென்னை உயர்நீதிமன்றத்தின் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகள் பணியிடங்களின் எண்ணிக்கை 75 ஆகும். அவற்றில் இன்றைய நிலையில் 9 பணியிடங்கள் காலியாக உள்ளன. அடுத்த 3 நாட்களில் ஒரு நீதிபதி ஓய்வு பெறவிருக்கிறார். ஜூலை மாதம் வரை மேலும் 7 நீதிபதிகள், செப்டம்பர் மாதத்தில் ஒருவர் என நடப்பாண்டின் முதல் 9 மாதங்களில் மட்டும் மொத்தம் 10 நீதிபதிகள் ஓய்வுபெறவுள்ளனர். அவர்களையும் சேர்த்து நடப்பாண்டில் 19 நீதிபதிகள் புதிதாக நியமிக்கப்பட வேண்டும். அவ்வாறு புதிய நீதிபதிகளை நியமிக்கும் போது வன்னியர்கள் உள்ளிட்ட கடந்த காலங்களில் குறைந்த அளவில் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்ட சமூகங்களுக்கும், பிரதிநிதித்துவமே அளிக்கப்படாத சமூகங்களுக்கும் போதிய பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும். அது தான் முழுமையான சமூகநீதியாக இருக்கும்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் தொடக்கத்திலிருந்தே வன்னியர்களுக்கு மிக மிகக் குறைந்த அளவிலேயே பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது. சென்னை உயர்நீதிமன்றம் 1862&ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட நிலையில், அதன்பின் 121 ஆண்டுகளுக்கு வன்னியர்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை; இந்தியா விடுதலையடைந்து 36 ஆண்டுகளுக்கு வன்னியர்களால் உயர்நீதிமன்ற நீதிபதியாக முடியவில்லை. 1983&ஆம் ஆண்டில் தான் வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அதன்பிறகும் கூட அவர்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை.
இப்போதும் கூட சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள 66 நீதிபதிகளில் மூவர் மட்டும் தான் வன்னியர் சமூகத்திலிருந்து வழக்கறிஞராக பணியாற்றி நீதிபதிகளாக நியமிக்கப்பட்டவர்கள் ஆவர். சென்னை உயர்நீதிமன்றத்தில் இதுவரை ஒட்டுமொத்தமாகவே 7 வன்னியர்கள் தான் வழக்கறிஞர்களாக பணியாற்றி நீதிபதிகளாக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தவிர, 8 வன்னியர்கள் மட்டும் தான் கீழமை நீதிமன்றங்களில் நீதிபதிகளாக பணியாற்றி உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றவர்கள் ஆவர். சென்னை உயர்நீதிமன்றத்தின் 162 கால வரலாற்றில் தமிழகத்தின் பெரும்பான்மை சமூகமான வன்னியர்களுக்கு 15 முறை மட்டுமே நீதிபதி பதவி வழங்கப்பட்டிருப்பதும், அவர்களிலும் பலர் ஒரு சில ஆண்டுகளே நீதிபதிகளாக பணியாற்ற முடிந்திருப்பது சமூக அநீதியின் எடுத்துக்காட்டுகளாக வரலாற்றில் பதிவாகும்.
இதேபோல், வேறு பல சமூகங்களுக்கும் மிக மிகக் குறைவான பிரதிநிதித்துவமே வழங்கப்பட்டுள்ளது; இன்னும் சில சமூகங்களுக்கு இன்று வரை பிரதிநிதித்துவமே வழங்கப்படவில்லை என்பது வேதனையான உண்மை. உயர்நீதிமன்றங்கள் மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் இட ஒதுக்கீடு நடைமுறையில் இல்லை என்றாலும் கூட, உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் அனைத்து சமூகங்களுக்கும், அனைத்து பிராந்தியங்களுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும் என உச்சநீதிமன்றமும், சட்ட ஆணையமும் பல்வேறு தருணங்களில் கூறியுள்ளன. ஆனால், அந்த அறிவுரைகள் இன்று வரை மதிக்கப்படவில்லை.
வன்னியர்களுக்கோ, பிற சமூகங்களுக்கோ பிரதிநிதித்துவம் அளிப்பதற்காக அச்சமூகங்களைச் சேர்ந்த தகுதியும், திறமையும் இல்லாதவர்களை நீதிபதிகளாக்க வேண்டும் என்றோ, பிற சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படக் கூடாது என்றோ கோரவில்லை. மாறாக, தகுதியும், திறமையும் வாய்ந்த, வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் பலர், அவர்கள் வன்னியர்கள் என்பதற்காக திட்டமிட்டு புறக்கணிக்கப்படுவதைத் தான் தவறு என்றும், தவிர்க்கப்பட வேண்டும் என்றும் கூறுகிறேன்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதிகள் பணியிடங்களுக்கு தகுதியானவர்களைத் தேர்வு செய்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் கொலிஜியத்திற்கு பரிந்துரைக்கும் நடைமுறைகள் தொடங்கி விட்டதாக அறிகிறேன். சமூகநீதியை உறுதி செய்யும் வகையில் புதிய நீதிபதிகள் நியமனத்தில் வன்னியர்கள் மற்றும் போதிய பிரதிநிதித்துவம் இல்லாத சமூகங்களைச் சேர்ந்த தகுதியும், திறமையும் கொண்ட வழக்கறிஞர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.